Show all

அஜித், விஜய், சூர்யாவுக்கு உயர் அறங்கூற்றுமன்றம் மதுரைக் கிளை ஓர் இனிய உத்தரவு!

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,

1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 2.அதிலே அதிரடி. 

3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள் இருக்கும்!

அஜித், விஜய், சூர்யாவுக்கு உயர் அறங்கூற்றுமன்றம் மதுரைக் கிளை ஓர் இனிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் மூவரும் தமிழக அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்துக்கு தூதுவராக இருந்து தமிழகப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாம். 

முறையாகவும், தொடர்ச்சியாகவும் போலியோ சொட்டுமருந்து முகாம்களை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தின் மதுரை கிளையில் ஜான்சி ராணி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை பதிகை செய்தார். அவரது மனுவில், 'இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. அதில் 18 அகவைக்கு உட்பட்டோர் 32 கோடி பேர் உள்ளனர். ஒரு நாட்டின் சுகாதாரமே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையாகும். சுகாதாரத்திற்காக நடுவண், மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகின்றன. இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

குழந்தை அகவையில் போலியோ நோய் தாக்கிவிட்டால் மரணமடையும் வரை அதிலிருந்து மீளமுடியாது. இந்தியாவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வந்தாலும், போலியோ நோய் இல்லாத நாடாக இந்தியா இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

தற்போது தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் முறையாகவும், தொடர்ச்சியாகவும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடைபெறுவதாகவும், வரும் ஞாயிற்றுக் கிழமை கூட சொட்டுமருந்து முகாம் நடைபெறவிருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடப்பது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லையெனவும், விளம்பரங்கள் கொடுக்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகர்கள் மக்களிடையே ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள் எனவும், அவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தால் எளிதாக மக்களைச் சென்றடையும் எனவும் அறங்கூற்றுவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.