ஊரடங்கை முடிக்க வேண்டிய நாளான 20,சித்திரைக்கு (மே3) பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களும் அவ்வாறான கோணத்தில்தாம், இலட்சக் கணக்கில் சமூக வலைதளங்களில் பதிவிட்டும், காணொளிகளை வெளியிட்டும் குற்றச்சாட்டை வழக்கிட்டு வருகின்றார்கள். 12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை முடிக்க வேண்டிய நாளான 20,சித்திரைக்கு (மே3) பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில் கூறியதாவது:- கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. உழவர்கள், கட்டிட தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மற்றும் தொழில், வணிகம் என்று பல்வேறு துறைகளில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் மாநிலங்களின் முதல்வர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்து தலைமைஅமைச்சருக்கு நான் பலமுறை கடிதம் எழுதி இருக்கிறேன். நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண நடுவண் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால் நடுவண் அரசு காங்கிரஸ் தெரிவிக்கும் யோசனைகளைப் பொருட்படுத்தாமல், பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மக்கள் சந்திக்கும் துயரங்களுக்குத் தீர்வு காண பரந்த மனப்பான்மையுடன் செயல்பட முன்வர வேண்டும். கொரோனா நுண்ணுயிரி பரவலின் காரணமாக நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில், பாரதீய ஜனதா கட்சி சமூகத்தினரிடையே வெறுப்பு நுண்ணுயிரியைப் பரப்பி வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வருகிற 20,சித்திரையுடன் (மே3) முடிவடைய இருக்கும் நிலையில், அதற்கு பின் நிலைமையை கையாளுவது எப்படி? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. முழுஅடைப்பு காலகட்டம் முடிந்த பிறகு நிலைமை மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது. கொரோனாவை கண்டறிவதற்கான மாற்று பரிசோதனை முறைகளோ, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான சரியான திட்டங்களோ இல்லை. குறைந்த அளவிலேயே சோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனை கருவிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. இருக்கும் கருவிகளின் தரமும் மோசமாக உள்ளன. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களிடம் போய் சேரவேண்டிய உணவு தானியங்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு தானியங்களை பெறவேண்டிய நிலையில் இருக்கும் 11 கோடி மக்கள், பொதுவினியோக திட்டத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவு தானியங்கள், 1 கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வழங்க வேண்டும். முதற்கட்ட ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி இருப்பதால் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் எனவே ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் நிதி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். உழவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்ததுறையின் மூலம் மட்டும் 11 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். எனவே இந்தத் துறையை பாதுகாப்பதற்கான சிறப்புத்;; திட்டங்களை நடுவண் அரசு அறிவிக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலங்குப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கட்டாயத்தேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். மாநிலங்களில் கொரோனாவை ஒழிக்க அங்குள்ள அரசுகள் ஓய்வின்றி போராடுகின்றன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகத் தொண்டர்களும் பாடுபடுகிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். இவ்வாறு சோனியா காந்தி கூறினார். ஒரு பெரிய திருமண மண்டபம். குறிப்பிட்ட மதிப்புள்ள நகையைக் காணவில்லை. நகையைக் கண்டு பிடிக்கவேண்டும். யாராயிருந்தாலும் உடனடியாக மண்டபத்திற்குள் அனைவரையும் அப்படியே அடைக்கும் முயற்சியைத்தாம் முதலாவதாக முன்னெடுப்பார்கள். சரி அடுத்து என்ன செய்ய வேண்டும்? உடனடியாக காவல்துறைக்குத் தெரிவித்து பாதுகாப்பாக அனைவரிடமும் தேடும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதுவும் மிகச் சில மணிநேரங்களில் முடியவேண்டும். அடுத்து அங்கே திருமண நிகழ்ச்சி நடக்க வேண்டுமானால், அந்த நிகழ்ச்சி நேரத்திற்குள் கதவடைப்பு முடியவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி மணமக்கள் வீட்டாருக்கு இருக்கும். அல்லது யாருக்கும் அவ்வளவாகத் தொடர்பில்லாத பொது நிகழ்ச்சி என்றால் அடுத்த உணவு வேளைக்குள்ளாகவோ, அடுத்த நாள் வந்து அனைவரின் அடுத்த கடமைகளும் தொடங்குவதற்கு தடையில்லாமல் கதவடைப்பு முடியவேண்டும். ஆனால் இந்தக் கொரோனா ஊரடங்கில் நடுவண் அரசு அதிகாரப்பாடாக ஊரடங்கை அறிவித்துவிட்டது. காவலுக்கு காவல்துறையை நிறுத்திவிட்டது. அடுத்த கடமைகளுக்காக வெளியே வருகிறவர்கள் மீது வழக்கு, பறிமுதல் என்று இலட்சக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டு விட்டன. கோடிக்கணக்கான அபராதங்கள் வசூலிக்கப்பட்டு விட்டன. இன்றோடு ஒரு மாதம் முழுமையாக முடிந்தே விட்டது. கொரோனா கண்டுபிடிப்பு நிறைவடைந்து விட்டதா? அரசின் அனைத்து துறைகள், அனைத்து துறையின், அனைத்து ஊழியர்களும், அனைத்து பணியாளர்களும், அனைத்து அதிகாரிகளும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், ஆளுகின்ற, ஆளுவதற்கு போட்டித் தளத்தில் இருக்கிற அனைத்து அரசியல்வாதிகளும், அறங்கூற்று, கட்டுப்பாட்டு வங்கி, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் ஆகிய மக்களாட்சித் தத்துவத்தின் தூண்கள் எல்லாம் களம் இறக்கப்பட்டார்களா? அப்படி களமிறங்கியிருந்தால், அதிக பட்சமாக ஒரே கிழமையில் கொரோனாவை முழுக்க முற்றாக கட்டுபிடித்து தனிமைப்படுத்தி, ஊரடங்கை துணிச்சலாக முதலாவதாக அறிவிக்கப்பட்ட 21 நாட்களிலேயே முடித்துக் கொண்டிருக்கலாம். நடுவண் பாஜக அரசுக்கு, கதவடைக்கப் பட்ட மண்டபத்தில் நடத்தப்படவேண்டிய திருமண நிகழ்ச்சி போன்ற கட்டாயம், பொறுப்புணர்ச்சி, பரபரப்பு, எதுவும் கடந்த போன நாட்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அடுத்த கிழமையில் கட்டாயம் ஊரடங்கை முடித்துக் கொள்ளாவிட்டால், அதிகாரப்பாட்டின் மூலம் அடைக்கப்பட்ட மக்கள் என்ன ஆவார்கள்? என்ன செய்வார்கள்? என்ற பரபரப்பு கூட காணோம். அடுத்த தேர்தல், அதில்; மக்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் குறித்த அச்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளால்தாம் அவர்கள் ஆட்சியைப் பிடித்தார்களா என்கிற ஐயம் ஒவ்வொரு தனிமனிதனிடம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒருகிழமைக்குள் நகை கண்டுபிடிக்கப்படுமா? நகையை கண்டுபிடிக்காமலே மண்டபம் திறக்கப்படுமா? அல்லது தொடர்ந்து மண்டபம் மூடப்பட்டிருக்குமா? அப்படி மூடியிருந்தால் உள்ளே அடைபட்ட மக்களின் அன்றாடத் தேவைகள், கடமைகள் ஆகியவற்றுக்கு உள்ளே அடைந்து கிடப்பவர்கள் என்ன விலை கொடுக்கப் போகின்றார்கள்? எல்லோருக்கும் இதே கேள்விதாம். பதில்சொல்லவேண்டிய நடுவண் பாஜக அரசு சும்மாயிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



