Show all

ஏ.டி.எம். மற்றும் வங்கிகள் மூலம், ரூ144கோடி கள்ள நோட்டுக்கள் விநியோகம்

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம், ரூ144 கோடி மதிப்பிற்குரிய 19 லட்சம் கள்ள நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வாயிலாக கண்டறியப்பட்ட கள்ளநோட்டுக்கள் என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 19 லட்சம் கள்ள நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.100 நோட்டுக்கள் 5.42 லட்சம் விநியோகிக்கப் பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.54.21 கோடி ஆகும். ரூ.42.8 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுக்கள் 8.56 லட்சமும், ரூ.47 கோடி மதிப்பிலான ரூ.1000 நோட்டுக்கள் 4.7 லட்சமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் கள்ள நோட்டுக்களைக் கண்டறியும் கருவிகளை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்கு முன் கருவிகள் மூலம் ரூபாய் தாள்கள் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் நிரப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளில் போதிய அளவு ஆட்கள் இல்லாததால் இந்தத் தவறு நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கள்ள நோட்டுக்களை எளிதில் எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த பயிற்சி வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.