Show all

அமெரிக்காவிலேயே ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் தகவல் நுட்ப நிறுவனங்கள்

புதிய அதிபராகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்களை வாழவைக்கும் எச்1பி விசா நடவடிக்கைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் வரும் என்ற அச்சத்தினால் அமெரிக்காவில் கல்லூரி வளாகங்களில் நேர்காணல்கள் நடத்தி ஊழியர்கள் தேர்வில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்கள் ஈடுபடவிருக்கின்றன. ட்ரம்ப் தனது எச்1பி விசா நடவடிக்கைக்காக அதன் நீண்ட கால விமர்சகரான அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸை தன் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளதால் இந்தியாவின் 150 பில்லியன் டாலர்கள் தகவல் நுட்ப சேவைகள் துறை அங்கு கல்லூரி வளாகங்களில் புதிய ஊழியர்களுக்கான நேர்காணல்களில் ஈடுபடவுள்ளது. டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் எச்1பி விசா ஊழியர்கள் மட்டும் 2005 முதல் 2014 வரை 86,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களில் மிகப்பெரிய சந்தை அமெரிக்காதான். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரவின் ராவ், கூறும்போது, “உலகம் முழுதுமே தங்கள் நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்கும், தக்கவைக்கும் தற்காப்பு அணுகுமுறைகள் அதிகரித்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக குடியேற்றத்தையும் திறன் அதிகமுள்ள தற்காலிகப் பணியாளர்கள் இங்கு வருவதையும் குழப்பிக் கொள்கிறார்கள். நாங்கள் தற்காலிகப் பணியாளர்கள்தான்” என்றார். சிலிகான்வாலியின் ஒட்டுமொத்த பணிச்சூழலில் இந்திய திறன் பணியாளர்களின் பங்களிப்பு அதிகம். இவர்களது மலிவான தகவல் நுட்ப, மென்பொருள் வேலைகளை அமெரிக்க வர்த்தகம் நம்பியுள்ள நிலையில் இதில் மாற்றங்கள் வருவது செலவுகளை அதிகரிக்கும் என்று சிலர் கருதுகின்றனர். இதனால் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பும் மென்பொருள் பொறியாளர்கள் எண்ணிக்கை குறையும் என்றும் அமெரிக்காவிலேயே புதிய பணியாளர்களைக் கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, நிறுவனங்களும் அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டியதாக தெரிகிறது. “அமெரிக்காவில் உள்நாட்டுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக் கழகங்களிலிருந்து புதியவர்களைத் தேர்வு செய்வதையும் தொடங்க வேண்டும். அதாவது புதியவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து கொஞ்சம் கொஞ்சமாக பணியில் அமர்த்த வேண்டும், நிச்சயம் இதனால் செலவுகள் அதிகரிக்கும்” என்கிறார் இன்போசிஸ் சி.ஓ.ஓ. ட்ரம்பின் வெற்றி, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற வாக்களித்தமை ஆகியவற்றினால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பெரிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் வரை செலவினங்களை கடுமையாக குறைத்துள்ளது. இதனால் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்களுக்கும் சற்றே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.