12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார், அங்கிருந்து செங்கனூர், ஆலப்புழாவில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். செங்கனூரில் உள்ள இரு கல்லூரிகளில் தங்கி இருக்கும் மக்களை ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களுடன் பேசிய ராகுல் காந்தி வெள்ள பாதிப்புகளையும், மழையின் விவரங்களையும் கேட்டறிந்தார். அவருடன் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநிலத் தலைவர் எம்எம் ஹசன் உள்ளிட்டோர் இருந்தனர். அதன்பின் மழை வெள்ளம் காலத்தில் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாகச் செயல்பட்ட பல்வேறு மீனவர்களுக்கு விருதுகளையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கிக் கவுரவித்தார். குறிப்பாக மலப்புரத்தில் மீனவர் செய்சல் என்பவர், வெள்ளத்தில் பெண்களை மீட்டபோது, படகில் பெண்கள் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது, தண்ணீரில் குனிந்து கொண்டு தனது முதுகைப் படியாக மாற்றி, பெண்கள் ஏறிச் செல்ல மீனவர் செய்சல் உதவினார். இவரின் இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. அந்த மீனவர் செய்சலுக்கு நினைவுப்பரிசு வழங்கி ராகுல் காந்தி கவுரவித்தார். கேரளாவில் மழை, வெள்ளம் பாதித்தபோது, முப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு எனது பாராட்டுக்கள் அவர்களின் பணிக்கு நான் தலை வணங்குகிறேன். காங்கிரஸ் கட்சி நடுவண் அரசில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், மீனவர்கள் நலனுக்குத் தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும். இதை பொய்யாக நான் உரைக்கவில்லை. வாக்குறுதியும் அளிக்கவில்லை, காங்கிரஸ் தலைவராக கூறுகிறேன். மீனவர்களின் மீட்புப்பணியைப் பார்த்துவிட்ட நிலையில், இனிவரும் பேரிடர் காலங்களில் மீனவர்கள் துணையை, பேரிடர் மீட்புப்படையினர் பயன்படுத்திக்கொள்வார்கள். உங்களின் கடினமான பணி, சேவையின் மூலம்தான் மக்கள் மீட்கப்பட்டார்கள் என்று பெருமையுடன் கூறுவேன். எப்போதெல்லாம் கேரளத்துக்கு தேவைப்படுகிறதோ நீங்கள் துணை நின்று இருக்கிறீர்கள், உங்களின் அளப்பரிய சேவையை அளித்து இருக்கிறீர்கள். கேரளத்துக்கான உங்களின் கடமை உணர்ச்சியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 3 ஆயிரம் மீனவர்கள் சேர்ந்து 70 ஆயிரம் மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி நெகிழ்ந்து போனார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



