Show all

திரைப்படப் பாணியில் அசத்தோ அசத்து என்று அசத்தும் தமிழக மாவட்ட ஆட்சியர்கள்! இந்தியாவே மூக்கில் விரல் வைக்கிறது

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மாவட்ட ஆட்சியர்கள், மக்களை அசத்தோ அசத்து என்று அசத்தும்  வகையில் செயல்படத் தொடங்கியுள்ளனர். 

சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார். நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி குளிர்ச்சியாக இருக்கும் என்று அங்கு போனால், இன்னொசன்ட் திவ்யா சூடு கிளப்புகிறார்.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்கு தூய்மையான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

பின்னர், அங்குள்ள மகளிர் நலவாழ்வு வளாகம் தூய்மையான முறையில் பேணப்படுகிறதா என்பதையும் கழிவுநீர் ஓடைகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தெரு விளக்குகளை ஆய்வு செய்த அவர், எரியாத விளக்குகளை ஒளிஉமிழ்இருமுனைய விளக்குகளாக மாற்றுமாறு உத்தரவிட்டார்.

மேலும் அதிரடியாக, சேரன்மகாதேவி அறங்கூற்றுமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது விடுவிடுவென அவர் ஏறத் தொடங்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள்.

ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொட்டியின் மீது ஏறி விட்டார். அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தூய்மையான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக தூய்மை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கீழே இறங்கி வந்த அவர், வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றிப் போகும் உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கடகடவென ஏறி இறங்கிய ஷில்பாவைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவராவ் நூறடி உயர தொட்டியில் ஏறி ஆய்வு நடத்தினார். தற்போது நெல்லை ஆட்சியரும் ஆய்வு நடத்தியுள்ளார். இதேபோல சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியும் அவ்வப்போது இது போல ஏதாவது செய்கிறார். சிமெண்ட்டை எடுத்து பூசுகிறார். தெருவைக் கூட்டுகிறார். பாடம் நடத்துகிறார். எல்லாம் மக்களுக்கான வெற்றிதான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.