Show all

ரூபாய்தாள் திரும்பப் பெறல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 9 கேள்விகள்

அதிக மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது. பழைய ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று நடுவண் அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, இந்த மனுக்கள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், மற்ற உயர் நீதிமன்றங்களில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடுவண் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், ரூபாய் தாள் திரும்பப் பெறலுக்கு எதிரான மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வௌ;ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, நடுவண் அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: பழைய ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறது. இதுவரை வங்கிகளில் 40 சதவீத பழைய ரூபாய் தாள்களுக்குப் பதிலாக புதிய ரூ.500, ரூ.2,000 தாள்கள் மாற்றி வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், கூட்டுறவு வங்கிகளில் நவம்பர் 11 முதல் 14-ஆம் தேதி வரையில் பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்கள் அடங்கிய ரூ.8 ஆயிரம் கோடியை மட்டும் புதிய ரூபாய் தாள்களாக மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முகுல் ரோத்தகி வாதிட்டார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: ரூபாய் தாள் விவகாரத்தில் நடுவண் அரசு தெரிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மக்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களைக் கருத்தில்கொண்டு, இந்த உறுதிமொழிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். அதேபோல், பழைய ரூ.500, ரூ.1000 தாள்களின் பயன்பாட்டினை மேலும் நீட்டிக்கலாமா - வேண்டாமா என்ற முடிவினை அரசிடமே விட்டுவிடுகிறோம். இந்த விவகாரத்தில் ஒரு சிறந்த நீதிபதியாக அரசு செயல்பட வேண்டும். இந்த கட்டத்தில், எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது. எனவே, ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறல் அறிவிப்புக்கு எதிராக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணை, 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த 9 கேள்விகளையும் அரசியல் சாசன அமர்வின் பரிசீலனைக்காக அனுப்பப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆவை- 1. உயர் மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற்ற அறிவிப்பானது ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 26 (2) பிரிவுக்கு (ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அதிகாரம்) முரணானதா? 2. இந்த அறிவிப்பானது, இந்திய அரசியல் சாசனத்தின் 300 (ஏ) பிரிவுக்கு (ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை அனுபவிப்பதிலிருந்து யாரும் தடுக்க முடியாது) எதிரானதா? 3. இந்த அறிவிப்பானது, அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவு (சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்) மற்றும் 19 (1) (ஜி) பிரிவுக்கு (விருப்பமான தொழிலை செய்வதற்கான சுதந்திரம்) புறம்பானதா? 4. ஒருவர் தன்னுடைய சட்டப்பூர்வமான பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்காதா? 5. ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சில நடைமுறைத் தோல்விகள் குடிமக்களை பாதிக்காதா? அவ்வாறு பாதித்தால், அது அரசியல் சாசனத்தின் 14, 19-ஆவது பிரிவுகளான அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்காதா? 6. ரூபாய் தாள்களை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 26-ஆவது பிரிவுக்கு உரிய அதிகாரத்தைக் காட்டிலும், கூடுதலான அதிகாரம் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதா? 7. அரசின் நிதி சார்ந்த கொள்கைகளில் நீதித்துறை ஆய்வு செய்வதன் நோக்கம் என்ன? (இது, நடுவண் அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி எழுப்பிய கேள்வியாகும்) 8. ரூபாய் தாள் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது; ஓர் அரசியல் கட்சியால் பொது நல வழக்கை தொடுக்க முடியுமா? (முகுல் ரோத்தகி எழுப்பிய கேள்வி) 9. பழைய ரூபாய் தாள்களை வைப்பு செய்வதற்கும், புதிய ரூபாய் தாள்களை வழங்குவதற்கும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்க முடியுமா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.