மூன்று வேளாண் சட்டங்களில் நன்மைகள் இருப்பதாக இந்திய முழுக்க 700 மாவட்டங்களில் மக்களிடையே கருத்துப்பரப்புதல் செய்திட பாஜக முடிவாம். 26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் வடஇந்தியா மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் குடும்பம் குடும்பமாக பதினாறாவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 5 கட்ட கலந்துரையாடலில் ஒன்றிய பாஜக அரசு போராட்டத்தை விலக்கிக் கொள்ளவே வலியுறுத்தி வருகிற நிலையில், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மட்டுமே தீர்வு என்பதை உழவர்களும் 5 கட்ட கலந்துரையாடலில் ஒன்றிய பாஜக அரசை நிர்பந்தித்து வருகின்றார்கள். உழவர்களுக்கான சட்டங்களை உழவர்கள் விரும்பாத நிலையில் ஒன்றிய பாஜக வலிந்து தொடர நினைப்பதால், இது உழவர்களுக்கு ஆதரவான திட்டம் இல்லை என்பதை மக்களால் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டு இது கார்ப்பரேட்டுகளுக்கான திட்டம் என்று ஆதாரங்களை அடுக்கி இணையம் நிரம்பி வழிகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பதிவு:- “மக்களுக்கு என்று பாஜக இதுவரை எந்தச் சட்டமும் இயற்றவில்லை. பாஜக கொண்டு வரும் சட்டங்களை மேலோட்டமாக பார்த்தால் மக்கள் நலனுக்கு என்பது மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். ஆனால், அந்தச் சட்டம் முழுக்க முழுக்க பெரும் முதலாளித்துவ நலனுக்காகவே இருக்கும். புதிய மூன்று வேளாண் சட்டமும் அம்பானி அதானி குழுமத்திற்காக உருவாக்கப்பட்டவை. புதிய வேளாண் சட்டம் வருவதற்கு முன்பே அதானி குழுமம் இந்தியாவில் பதினான்கு இடங்களில் உணவு தானியங்கள் சேகரிப்பதற்காக இராட்சத கிட்டங்கிகளை கட்டி வைத்துள்ளது. இனி, உணவு தானியங்களுக்கு அவர்கள் வைத்ததுதான் விலையாக இருக்கும். அவர்கள் தான் சந்தைப்படுத்துவார்கள். உழவர்கள் விளைவித்த பொருள்களுக்கு உழவர்களும் அரசும் தான் விலை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தில், கோதுமை பருப்பு போன்ற தானியங்களை அத்தியாவசிய பதுக்கல் சட்டத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். முதலாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கிக் கொள்ளலாம். புதிய வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டால் உழவர்கள் சுதந்திரமாக தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யமுடியாது. அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் நிலைதான் ஏற்படும். எதிர்காலத்தில் உணவுக்கு அவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்படும்.” என்று பதிவிடப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றபின் அடுத்த சிக்கல்களை ஆலோசிக்கலாம் என்றும், திங்கட் கிழமை முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் உழவர்கள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். உழவர்கள் போராட்டத்துக்கு ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர்த்து பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு தாங்கள் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து நேரடியாக மக்களிடையே தெரிவிக்க திட்டமிடுகிறதாம். பொதுக்கூட்டம், இதழியலாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றை இந்தியா முழுவதும் 700 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உழவர் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும், பல்வேறு வேளாண் ஆதரவு அமைப்புகளும், இணைய ஆர்வலர்களும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளன. உழவர்களின் நலனை அடகுவைத்து வேளாண் சந்தையைக் கைப்பற்றும் விதத்தில் இருக்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



