16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாதாக வங்கிகள் கணக்கு காட்டி வருகின்றன. லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற வில்லை. மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் முதன்மை நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் மல்லையா சேவை வரித்துறைக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அந்தச் சேவை வரியை வசூலிக்க, விஜய் மல்லையாவின் குட்டி விமானத்தை சேவை வரித்துறை அதிகாரிகள் ஐந்து ஆண்டுகளாக முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்தக் குட்டி விமானத்தை ஏலத்தில் விற்பனை செய்து பணத்தை பெற சேவை வரித்துறையினர் அறிவிப்பு செய்தனர். முதல் தடவை நடந்த ஏலத்தில் யாரும் அதிக பணத்துக்கு ஏலம் கேட்க வில்லை. இரண்டாவது நடந்த ஏலத்திலும் அதிக தொகை கேட்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக அந்த குட்டி விமானம் ஏலம் விடப்பட்டது. அப்போது மல்லையாவின் விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் பயணம் செய்யலாம். விமான பைலட், பணிப்பெண்கள் 6 பேர் இருந்தனர். இந்த சொகுசு விமானத்துக்குள் படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்த பார் வசதி, கான்பரன்ஸ் ஹால் ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம் ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில் இல்லை. இதனால்தான் அந்த விமானம் மிக, மிக குறைவாக ரூ.35 கோடிக்கு ஏலம் போனதாக தெரிய வந்துள்ளது. அடப்பாவிகளா! 650 கோடி மதிப்புள்ள பொருளை 35 கோடிக்கு விற்பதா? (!) ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி மல்லையா. (!) விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய வணிக அரசாங்கத்தை விட்டு விட்டு 35 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தபோது மல்லையாவுக்கு இளம் அகவை. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார். (!) தற்போது 56 அகவையாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார். (!) இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்). (!) மல்லையாவின் யூபிகுரூப், அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முதன்மையான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது யூபி குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி! (!) 15 ஆண்டுகளுக்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸை தொடங்கினார் மல்லையா. சிக்கல் தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் டெக்கானை வாங்கிய மல்லையா, அதை கிங்பிஷர் ரெட் என்று பெயர் மாற்றினார். ஆனால் அது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மூடுவிழா கண்டுவிட்டது. (!) பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய அணியை 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு போர்ஸ் இண்டியா என்று பெயர் சூட்டினார் மல்லையா. (!) கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா. (!) கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கியது இந்த அணி. (!) மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும். (!) மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். ராகு காலத்தில் வணிகம் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூசை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார். (!) விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் சேகரிப்புகளை வைத்திருக்கிறார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். (!) மல்லையாவுக்குச் சொந்தமான இண்டியன் எம்பரஸ் (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. கலிஸ்மா என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம். (!) குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் குனிகால் குதிரைப் பண்ணைக்கு உரிமையாளராக இருக்கிறார். நம்ப முடிகிறதா! மல்லையா- வங்கிகளை ஏமாற்ற வேண்டிய கட்டாயம் என்ன? வங்கிகள் சொல்வது முழுவதும் உண்மையா? இல்லை வங்கிகளுக்கும் இவருக்கும் வேறு ஏதாவது போட்டா போட்டியா? மல்லையா திரும்பி நின்று பேசினால்தான் உண்மை வெளிப்படும். ஆனால் திரும்பி நின்று அவர் பேசுவதற்கு என்ன தடை! என்பதெல்லாம் புரியாத புதிர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



