Show all

உழவர்கள் பார்வையில்! ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகள்

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகள்; கொண்டு வரப்படுவதாகவும் இதனால் உழவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் வட இந்தியப் பகுதிகளில் கூட அச்சம் எழுந்துள்ளது.

03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரும் எந்தத் திட்டமானாலும் அதில் சில அடிப்படைகள் கட்டாயம் இருக்கும். அவை: கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக திட்டமிடல், அதிகாரத்தை ஒன்றிய அரசில் குவித்தல், வட இந்தியர்கள் இந்தியா முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருத்தல், மாநில அரசை அதிகார அடிப்படையில் ஊர் பஞ்சாயத்துக்கள் அளவிற்கு குறுக்குதல் என்பனவாகும். 

ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகளில்  கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக திட்டமிடல் மிக வெளிப்படையாகவே தெரிவதால் இந்தத் திட்டத்திற்கு வடஇந்தியாவிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மை தொடர்பான மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகளுக்கும்  எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய உணவு பதினீட்டுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உழவர்கள் நடுவே பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 

வழக்கம் போல, இந்த மூன்று சட்டங்களுக்கும் ஆடுகளை வெட்டுவது ஆடுகள் வாழவேண்டும் என்கிற உயர்ந்த இலட்சியத்தின் பாற்பட்டதே என்று ஆடுவெட்டி சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியே இதிலும் பாஜகவினரின் மாய்மாளங்கள் ஆகா ஓகோ என்று பேசப்படுகின்றன.

ஆனால், இது உழவர்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியதென ஒன்றியஅரசில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கண்டனம் தெரிவிக்கிறார்.

1.இன்றியமையாப் பொருள்கள் திருத்த சட்டமுன்வரைவு, 2.வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டமுன்வரைவு, 3.ஒப்பந்த பண்ணைய சட்டமுன்வரைவு ஆகிய மூன்று சட்டமுன்வரைவுகளை தற்போது ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. 

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த சட்டமுன்வரைவுகள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் உழவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது. 

குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா உழவர்கள் நடுவே இது குறித்த விழிப்புணர்வால், அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. புதன், வியாழக் கிழமைகளில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

முதலாவதாக, இன்றியமையா பொருள்கள் என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில், உழவர்களின் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையும் இனி நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் கோரப்பிடியில் உழவர்கள் சிக்கி தவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

இரண்டாவதாக, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டத்தின் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் சந்தையை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. 

மூன்றாவதாக, பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டமுன்வரைவு என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சட்டமுன்வரைவுகளுமே உழவர்களின் கழுத்தை நெரிக்கக்கூடியது உழவுத் துறையில் இருந்து வரும் அறிஞர் பெருமக்கள்.

அரிசி, கோதுமை உள்ளிட்டவை, கட்டாயத்தேவைப் பொருள்கள் சட்டத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்தான், இவற்றை அரசு கொள்முதல் செய்து வந்தது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டதால்தான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்கு கீழ், விலையைக் குறைக்க முடியாத பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால், இனி அப்படியிருக்காது. 

தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லக்கூடிய விலைக்கு உழவர்கள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். உழவர்கள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைபொருள்களைப் பேரம் பேசி இலாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது, இது சாத்தியமே இல்லை. 

பெரும்பாலான உழவர்கள், சிறு, குறு ஏழை மற்றும் நடுத்தரத்தினர்களே. இவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக் கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் நம் உழவர்களிடம் இல்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.
இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உழவர்கள் தள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன்:- உணவுப் பொருள்களின் பதுக்கலை தடுக்கத்தான், கட்டாயத்தேவைப் பொருள்களின் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தன. வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நாட்டில் எங்கெல்லாம் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றை அரசு பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு நியாமான விலையில் வழங்கியது.

இனி அதுபோல் பறிமுதல் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் வியாபாரிகளும் உழவர்களிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து, வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் பார்ப்பார்கள். 

விளைபொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இனி எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்கள் தங்களது விளைப்பொருள்களைப் பெரும்பாலும் அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாகவே விற்பனை செய்தார்கள். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல்தான் வியாபாரிகள் ஏலம் கேட்க முடியும். ஆனால், இனி தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல் சந்தைகளை உருவாக்கி, உழவர்களின் வயிற்றில் அடிக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.