Show all

மூன்று வேளாண் முன்வரைவுகளுக்கும் கடும் எதிர்ப்பு!

அண்மையில் முன்னெடுத்த புதிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து, ஒன்றிய ஆட்சியில் பாஜகஅரசு ஆதிக்கப்பாடாக முன்னெடுக்கும் மூன்று வேளாண் முன்வரைவுகளுக்கும் கடும் எதிர்ப்பு

03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றிய ஆட்சி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு கிடைத்தது, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரு மாபெரும் விபத்தோ என்று சமூக ஆர்வலர்கள் ஐயுறும் வகையாகவே அதன் நடவடிக்கைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து வருகிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி கொண்டுவரும்; எந்த சட்ட முன்வரைவுகளும் மக்களுக்கும், ஒன்றியத்தின் பன்முகப்பட்ட மொழிகள் கலாச்சார வகைகளுக்கும், ஒன்றிய அரசிலமைப்பு வழங்கியிருக்கும் மாநிலங்களுக்கு உரிய தனி அதிகாரங்கள் மற்றும் உரிமைகளுக்கும் விரோதப் போக்குடையதாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி தொடங்கி அண்மை புதிய கல்விக்கொள்கை வரை அனைத்து சட்டவரைவுகளும் இவ்வாறன அடிப்படை உடையவைகளே.  

இந்த நிலையில் இந்தியாவின் முதன்மை அடிப்படையாகப் போற்றிக் கொள்கிற வேளாண்துறை மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை முன்னெடுக்க மூன்று வேளாண் சட்ட முன் வரைவுகளை முன்னெடுத்திருக்கிறது ஒன்றிய ஆட்சியில் பேரபாயமாகத் தொடரும் பாரதிய ஜனதா கட்சி. 

இந்த மூன்று வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மோடி அமைச்சரவையில் இருந்து சிரோமணி அகாலிதள பெண் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் நேற்று தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

ஒன்றிய ஆட்சியில் உள்ள தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதளமும் இடம் பெற்று இருந்தது. ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில்- வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய வேளாண் சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

இந்த வேளாண் முன்வரைவுகளுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த உழவர்களும் இந்த வேளாண் முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கட்டாயத் தேவைப் பொருட்கள் சட்ட திருத்த முன்வரைவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் முன்வரைவுக்கு எதிரான வாக்கு அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவிடம் முந்தாநாள் நிருபர்கள் கருத்து கேட்ட போது, சிரோமணி அகாலிதளம் சார்பில் எழுப்பப்பட்ட சிக்கல்களுக்கு பேசி தீர்வு காணப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், மக்களவையில் மற்ற 2 வேளாண் முன்வரைவுகள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுக்பீர் சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நாடாளுமன்றத்தில் பதிகை செய்யப்பட்ட 3 வேளாண் முன்வரைவுகளுக்கு சிரோமணி அகாலி தளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஒன்றிய பாஜக அமைச்சரவையில் இருந்து தான் பதவிவிலகுவதாக அறிவித்தார். அவர் இவ்வாறு பேசிய சிறிது நேரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் விலகுவதற்கான அதிகாரப்பட்டு கடிதத்தையும் வழங்கினார்.

மோடி அரசில் இருந்து விலகியதை ஹர்சிம்ரத் கவுர் கீச்சுவிலும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உழவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வேளாண் முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றி அமைச்சர் பதவியை விட்டு விலகுவதாகவும், உழவர்கள் மகளாகவும், உடன்பிறப்பாகவும் இருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் கூறி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.