Show all

டெல்லியில் வேலையிழப்பு! பலநூறு கிமீ நடந்தே சொந்த ஊர்செல்லும் பாமர மக்கள்: 21நாள் ஊரடங்கில்

டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயத்தேவைப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முதன்மை நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கும் நிலையில், சொந்த ஊருக்குச் சென்று கஞ்சியோ கூழோ குடித்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று முயன்றாலோ, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. 

பல மாநிலங்களில் அவர்கள் பகுதியாக தங்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன், சிலர் நடந்தே செல்கின்றனர். இவ்வாறு பலரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளதால் அவர்கள் வீட்டு வாடகையும் தர முடியாத சூழல் நிலவுவதால் அவர்களை வீட்டை காலி செய்யச் சொல்லி உரிமையாளர்கள நிர்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலைமை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். சில மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்தால் அவர்களே தருவார்கள். அப்படி அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும். இதற்காக யாரையும் வீடுகளை விட்டு வெளியேற்றாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

யாரும் சமூகம் சார்ந்து சிந்திக்கவில்லை! சீனர்கள் தன் விருப்பத்திற்கு செய்த தவறான உணவுப்பழக்கத்தால், கொரோனா அதன் விருப்பத்திற்கு தறிகொட்டு பரவுவதால், நடுவண் பாஜக அரசு தன்போக்கிற்கு 21ஊரடங்கு அறிவித்ததால், வேலையிழந்த மக்கள் வாடகை செலுத்த பணமில்லாமல், சாப்பிட உணவில்லாமல் தங்கள் பாட்டிற்கு டெல்லியைக் காலி செய்வதால், தற்போது சமூகவிலகல் குறித்த கருத்துப் பரப்புதல் சமூகத்தில் எடுபடவில்லை. நியூட்டனின் மூன்றாம் விதி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.