உழவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புதன்கிழமை டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இணைந்தனர். 03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் 3அடாவடி வேளாண் சட்டங்களை எதிர்த்து வடமாநிலங்களின் உழவர்கள் 22வது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேளாண் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உழவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புதன்கிழமை டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இணைந்தனர். தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 2,000 பெண்கள் செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் மால்வா பிராந்தியத்தில் இருந்து பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) ஏற்பாடு செய்திருந்த 17 பேருந்துகள் மற்றும் 10 டிராக்டர்களில், பயணம் செய்து, திக்ரி எல்லையிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள உக்ரஹான் போக்குவரத்து முகாமில், இறந்த உறவினர்களின் படங்களுடன் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் இணைந்த பெண்கள் பெரும்பாலும் சங்ரூர் மாவட்டத்தின் ஜக்பால் கிராமத்தைச் சேர்ந்த இறந்த உழவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குறைந்த நிலம் வைத்துள்ள சிறு வேளாண் குடும்பங்களின் ஒரு பகுதியாகும். இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட, குர்மேஹர் கவுர் (34), என்ற விதவை பெண் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் ஜுக்ராஜ் சிங் உயிரிழந்தார். அப்போது முதல் கிராமத்தில் நான் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், நிதி சிக்கல்கள் மற்றும் கடன் காரணமாக என்னால் நிலத்தைப் பேண முடியவில்லை. இதனால் நான் என் இளைய மகனை சரியாக கவனிக்க முடியாததால், என் அக்காவிடம் கொடுத்தேன். என் மூத்த மகன் எனது பெற்றோருடன் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். அவர்கள் அவரைப் படிக்க உதவுகிறார்கள். என் கணவரின் மரணத்திற்குப் பிறகு, நான் எங்கள் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தேன், தினசரி கூலி உழைப்பை செய்து வருகிறேன், மாதத்திற்கு சுமார் 1,800-2,000 சம்பாதிக்கிறேன். என் மூத்த மகனுக்கு இப்போது 18 அகவை, அவர் படிப்பு முடிந்ததும், அவர் வேளாண் வேலைகளை ஏற்றுக்கொள்வான், என்று கூறியுள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் குர்ச்சரன் சிங்கை இழந்த பால்ஜீத் கவுர் (52) என்ற பெண் கூறுகையில், எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திலிருந்து நாங்கள் மிகக் குறைவாகவே வருமானம் பெற முடியும். ஆனால் என் கணவருக்கு அவருக்கு ரூ .5 லட்சம் கடன் இருந்தது. மேலும் என தங்கையை திருமணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால் நான் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தேன். தற்போது என் இளைய மகன் உழவைக் கவனித்துக்கொள்கிறான். இந்தப் போராட்டத்தில் சேர நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களைப் போன்ற சிறு உழவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எங்களிடம் உள்ளதையும் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



