Show all

கொரோனா படுத்தும்பாடு- முழுசா இரண்டாயிரம் ரூபாய் போச்சே! எரித்துவிட்டார்கள் சூரத் நகராட்சி அதிகாரிகள்

ஐயப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபாய் தாளை, சுத்திகரிப்பு செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம். 

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சுமார் காலை 10.30 மணி வாக்கில், குஜராத்தில் புனா என்கிற பகுதியில் ஒரு 2,000 ரூபாய்தாள் சாலையில் கிடந்து இருக்கிறது. இந்த 2,000 ரூபாய் தாளைப் பார்த்தவர்கள், காவலர்களுக்குத் தகவல் சொல்லி இருக்கிறார்கள். 

அந்த 2000 ரூபாய் சும்மா கிடக்கவில்லை, அந்தத்தாள் காற்றில் பறக்காமல் இருக்க, அதன் மேல் ஒரு கல்லையும் வைத்து இருக்கிறார்கள். குடிமை அதிகாரிகள், காவலர்கள் 2,000 ரூபாய் தாள் கிடந்த இடத்துக்கு வந்து, அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விரிவாக விசாரித்து இருக்கிறார்கள். சூரத் நகராட்சி அதிகாரிகள், 2,000 ரூபாய் தாளை முழுமையாக சுத்தகரிப்பு செய்து இருக்கிறார்கள். 

ஐயப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபாய் தாளை, சுத்திகரிப்பு செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம். காவலர்கள், இந்த 2000 ரூபாய் சிக்கல் தொடர்பாக ஒரு புகாரையும் பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம்.   

யாராவது வேண்டும் என்றே இந்த 2,000 ரூபாய் தாளை, பயத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் விட்டுச் சென்று இருக்கிறார்களா எனப் பார்க்க, அருகில் இருக்கும் கண்காணிப்பு படக்கருவிகளின் காணொளிக் காட்சிகளை, காவலர்கள், வாங்கி வைத்து இருக்கிறார்களாம். 

இப்படி, ஏற்கனவே டெல்லி சாந்தினி சௌக் நகர பகுதியில், ஒருவர், தன் எச்சில் மற்றும் வியர்வையை 2,000 ரூபாய் தாள்களில் தடவி, மூன்று 2,000 ரூபாய் தாள்களை நடை பாதையில் போட்டதாக ஒரு நிகழ்வு பதிவாகி இருப்பதும் அதிகாரிகளின் அச்சத்திற்கு காரணம்.

கொரோனா பரவல் அச்சத்தில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் இப்படி ஒரு 2,000 ரூபாய் தாள் சாலையில் கிடந்தால்  எரிக்காமல் என்ன செய்வது என்கின்றனர் அதிகாரிகள். 

இப்படி இரண்டாயிரம் ரூபாய் தாள் எரிக்கப்பட்டதால் நாட்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் இழப்பு இல்லையா? என்று கேட்கத் தோன்றினால், நாட்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் ஆதாயம் என்பதுதான் உண்மை. அந்த இராண்டாயிரம் ரூபாய்க்கு உரிய உழைப்பை அல்லது உற்பத்தியைத் தந்தவர் அந்த இரண்டாயிரம் ரூபாய்தாளை எப்படியோ தவற விட்டதில் அவருக்குத்தாம் இரண்டாயிரம் ரூபாய் இழப்பு. 

அந்த ரூபாய் தாளை யாராவது எடுத்துப் பயன்படுத்தியிருந்தால் அதை எடுத்தவருக்கு உழைப்பில்லாமல், உற்பத்தியில்லாமல், அந்த இரண்டாயிரத்திற்கு அரசிடமோ, யாரிடமோ உழைப்பையோ, உற்பத்தியையோ இலவசமாக பெறுவதற்கு அவருக்கு கிடைத்த அதிகாரம் ஆகும் அந்த இரண்டாயிரம். 

எத்தனை ரூபாய்தாளாக இருந்தாலும், அத்தனை ரூபாய்க்கு அது செல்லுபடியாகும் என்கிற வகையில், வைத்திருப்பவர் பயன்படுத்திக் கொள்வதற்கான காசோலைதாம் ரூபாய்தாள்கள். இப்போது அந்தக் காசோலை எரிக்கப்பட்ட நிலையில், அந்தக் காசோலைக்கு உரிய பணத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டியதில்லாத நிலையில் அரசுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஆதாயமே. இதுதான் ஆதாயம் இல்லாமல் எந்த வணிகனும் ஆற்றோடு போகமாட்டார்கள் என்கிற சொலவடைக்கு பொருளோ.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.