மூன்று நாட்களில் 180 ஆசிரியர்களுக்குக் கொரோனா காரணமாக, பள்ளியை அவசரமாகத் திறந்து விட்டோமோ என்று ஆந்திர மாநிலம் கைபிசைந்து நிற்கிறது. இதைக் காணும் தமிழகம் பள்ளித்திறப்பில் தயக்கம் காட்டி வருகிறது. 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் திங்கட் கிழமை முதல் ஆந்திரா மாநிலத்தில் திறக்கப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்றாலும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 180 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மென் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகின்றன என்றும், ஆனாலும்; அந்திர மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதை மாவட்ட கல்வி அலுவலர் (சித்தூர்) நரசிம்ம ரெட்டி உறுதிப்படுத்தினார். தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன நிலையில் உள்ளனர் என்பதும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும்பாலும் காலஹஸ்தி, திருப்பதி, மதனப்பள்ளி, சித்தூர், புங்கனூர், பலமனெர், இராமசமுத்திரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பாதிப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சமமாக உணரப்படுகிறது. தகவல்களின்படி, மாணவர்களின் வருகை தனியார் பள்ளிகளில் 50விழுக்கட்டிற்கு குறைவாகவும், அரசு பள்ளிகளில் 60விழுக்காட்டிற்கும் குறைவாகவும் உள்ளன. இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் சற்று அதிகமாக உள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காலஹஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மூன்று ஊழியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. தமிழ்நாட்டில் கார்த்திகை முதல் நாளில் (நவம்பர் 16) பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதனால் எதிர்வரும் திங்கட் கிழமை பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அரசு முடிவை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ஆந்திராவில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களிடையே ‘பள்ளி திறப்பு’ கடும்அச்சத்தை உருவாகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



