Show all

மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி! மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில்

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரச்சனைப் புகழ் ஆதித்தியாநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வாராணசி தொடர்வண்டி நிலையம் அருகே கட்டப்பட்டுவந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. அவ்வழியே சென்றுகொண்டிருந்த கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின.

இடிபாடுகளில் இருந்து 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன வாராணசி மக்களவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான மோடி, இந்த விபத்தில் உயிரிழவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து கீச்;சுவில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

வாராணசியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன் என்று அந்தப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.