30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்திய தொழிற் நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முதன்மை நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் தில்லி 3வது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. காற்றில் கலந்துள்ள நச்சு துகள்களால் தில்லியில் மட்டும் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நச்சு கலந்த நுண் துகள்களை சுவாசிக்கும்போது அவை நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் இருதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல். புற்றுநோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு சுகாதர விளைவுகள் தொடர்புடைய நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு பட்டியலின் படி, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தானின் கராச்சியில் 7 ஆயிரத்து 700 பேரும், மும்பையில் 10 ஆயிரத்து 400 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின்படி ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு பிராந்திய முயற்சிகளையும், நிரந்தரமான காற்று தர இலக்குகளை அமைப்பதற்கான தேவையையும் இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தலைநகரை தில்லியிலிருந்து இந்தியாவின் நடுவில் இருக்கிற ஊருக்கு மாற்றினால் மட்டுமே தில்லியில் காற்று மாசை குறைக்க முடியும். இன்னும் சிறப்பாகச் செயல் படவேண்டுமானால் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைநகர் என்று இந்தியா முழுவதும் தலைநகர்களை பகிர்ந்தளிக்கலாம் பழந்தமிழ் மன்னர்கள் காலத்தில் இரண்டு மூன்று தலைநகர்களைக் கூட அமைத்துக் கொண்டதை வரலாற்றில் நாம் காணமுடியும். சோழர் காலத்தில் உறந்தையும் புகாரும் என இரண்டு தலைநகரம் இருந்ததை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



