Show all

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையின் புதிய யுக்தி என்ன தெரியுமா?

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம், முதலாவதாக இது நடுவண் அரசின் திட்டம். நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்ற முயன்ற கெயில் எரிவாயு, மீத்தேன், நியுட்ரினோ போன்றவற்றுக்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகத்தான் தமிழக அரசு போராடி பெற்றத் திட்டம் என்று எடப்பாடியை பேசவிட்டு தமிழக அரசின் மூலமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் நடுவண் அரசன் புதிய யுக்தி.

வேளாண் நிலங்களைப் பிடுங்கி திட்டத்தை முன்னெடுக்கிற வேலையைதான் தமிழ அரசும், மாவட்ட ஆட்சியாளர்களும், தமிழக காவல்துறையும், வருவாய், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் செய்வார்கள். அப்புறம் வழக்கமான கார்ப்பரேட் நிறுவனங்கள் வாரிக் குவிப்பார்கள். சுங்கமும் வசூலித்து கொள்ளையடிப்பார்கள்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியதாவது:

உழவர்களின் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படும். பட்டாதாரர்களான 853 உழவர்களின் உதவியுடன் 18 கி.மீ தூரம் சாலை அளவிடும் பணி முடிவடைந்துள்ளது. உழவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இழப்பீடு வழங்கப்படும். அரசின் பல்வேறு துறைகள் மூலமும் நலத்திட்டங்களும் வழங்கப்படும்.

நிலத்திற்கு மட்டுமல்லாமல், அதில் உள்ள மரம், வீடு, கிணறு, கூரை, மாட்டு கொட்டகை என அனைத்திற்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களது சந்தேகங்களை அறிந்து கொள்ள உழவர்களுக்கு தற்போதும் வாய்ப்பு உள்ளது.

கையகபடுத்தும் நிலங்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, குறைந்த பட்சம் 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.9.04 கோடியும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்றும், நிலத்தை வழங்கவுள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க தேவையான பயிற்சிகள் அளித்து அதற்கான மானியம், கடனுதவி வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.

மேலும், எட்டு வழிசாலை திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

இந்த சாலை எதற்காகப் போட வேண்டும்? இருக்கிற மூன்று சாலைகளையே சீரமைத்து அழகுபடுத்திக் கொள்ள என்ன தடை? என்ற கேள்விகளுக்கு மட்டும் எந்த மட்டத்திலிருந்தும் எந்த தெளிவான பதிலும் இல்லை. மாறாக இந்தத் திட்டம் அபாயகரமானது என்று தெளிவு படுத்தும் சமூக ஆர்வலர்கள் தாம் இந்தத் திட்டம் எதற்காக போடப் படுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இல்லையில்லை அதற்கான தெல்லாம் இல்லை என்று அரசு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக மறுப்பு மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தமிழக அரசு அதிகாரிகளை நம்பி இந்தத் திட்டம் ஒப்படைக்கப் பட்டிருப்பதால், சாம, பேத, தான, தண்ட முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டு, எதிர்ப்புகள் தூள்தூளாக்கப் பட்டு திட்டம் செவ்வனே நிறைவேறும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.