Show all

வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர்! சிங்களப் பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவரான கோத்தபயாவிற்கு

சிங்களவர்கள் நடுவே பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவராகக் கருதப்படுகிற கோத்தபயாவின் வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர். இலங்கை மக்கள் நடுநிலைக்கு பக்கமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பது, இந்தத் தேர்தலிலும் தெரிய வருகிறது.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் கடந்த முறை அதிபர் மைத்திரிபால சிறிசேன நடுநிலையாளர் என்ற தலைப்பில் 51.28 வாக்குகள் பெற்று அதிபராகியிருந்தார்.
 
தற்போது புதிய அதிபராக பதவியேற்க உள்ளார் எழுபது அகவை கோத்தபயா ராஜபக்சே. சிங்களப் பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவரான இவர் 51 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபராக முடிசூட உள்ளார்.

ஆக இலங்கையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற காரணியாக ஒற்றை விழுக்காடுதான் இருந்து கொண்டிருக்கிறது. வெல்கிறவர் இலங்கையின் நடுநிலையைப் பேணி காக்க மக்கள் விருப்பமாகத்தான் இருக்கின்றனர் என்றே தெரிகிறது. 

ஆனால் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் இலங்கையில் நடுநிலையான ஒரு ஆட்சி அமையத் தடையாகவே இருந்து வந்திருக்கிறார்கள். இவர் நடுநிலையாளராக இருப்பார் என்று நம்பி வாக்குகள் அளிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது பதவியின் இறுதி காலங்களில் சிங்களப் பேரினவாதியாக தன் நிறத்தை மாற்றிக் கொண்டார். 

இந்தத் தேர்தலில் அதிபராக வென்றுள்ள கோத்தபயா ராஜபக்சே சிங்களப் பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவராக சிங்களவர்களால் போற்றிக் கொள்ளப்படுகிறாரே அன்றி  நடப்பு தேர்தலுக்காக, தேர்தல் வாக்குறுதியில் பெரிதாக சிங்களப் பேரினவாதம் பேசிடவில்லை அவர். 

கோத்தபயா ராஜபக்சேவுடன் பிறந்தவர்கள் எட்டு பேர். இதில் மகிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தவர். சமல் ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே, பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

கோத்தபயா- விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவப் படையில் பணியாற்றினார். 20 ஆண்டுகள் ராணுவ பணிக்கு பின், ஓய்வு பெற்று, கொழும்பு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் சந்தை மேலாளர் ஆனார்.

இவரது தலைமையில் செயல்பட்ட இலங்கை ராணுவம், இந்தியா உள்ளிட்ட, உலகநாடுகள் ஒத்துழைப்புடன்  விடுதலைப்புலிகளை வென்று, உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக, வரலாற்றில் பதிவாகியுள்ளது. போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கை மற்றும் அமெரிக்கா என இரண்டு குடியுரிமை வைத்துள்ளதாக இவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தமிழர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவர் தமிழர்களை அரவணைப்பாரா என்பது- போக போகத்தான் தெரியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,339.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.