Show all

சினத்தின் உச்சியில் டிரம்ப்! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய தலைமை அமைச்சர் மோடி

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வாஷிங்டன் நகரில் உள்ள வௌ;ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமானால் 100 விழுக்காடு இறக்குமதி வரி செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது, நான் பிரமாதமான மனிதராக நினைக்கும் இந்திய பிரதமர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த இறக்குமதி வரியை 50 விழுக்காடாகக் குறைத்து விட்டோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்றேன். ஆனால், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை. நமக்கு 50 விழுக்காடு சகாயம் செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது சகாயமே அல்ல.

அவர் அழகான மனிதர் (பிரதமர் மோடி பேசும் பாணியில் தனது குரலை மாற்றியபடி) இறக்குமதி வரியை 75 விழுக்காடாகக் குறைத்தோம், இப்போது மேலும் 50 விழுக்காடகக் குறைத்து விட்டோம் என்று அவர் என்னிடம் கூறினார்.

நான் என்ன சொல்லட்டும்? இதை கேட்டு நான் பரவசமாகி இருப்பேன் என நீங்கள் (ஆளுனர்கள்) எதிர்பார்க்கிறீர்களா? இது சரியல்ல. நாம் இதைப்போல் பல விவகாரங்களை சந்தித்து வருகிறோம்.

இந்தியாவில் இருக்கும் இருசக்கர வாகன நிறுவனங்கள் நமது நாட்டில் ஏராளமான வாகனங்களை விற்று வருகின்றன. இதில் நமக்கு கிடைப்பது சுழியம்தான். ஆனால், அவர்களுக்கு முன்னர் 100 விழுக்காடு இறக்குமதி வரியாக கிடைத்தது. பின்னர், 75 விழுக்காடாகி, தற்போது 50 விழுக்காடாக நீடிக்கிறது. இது நியாயமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

வணக்கம் டிரம்ப்! எங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையுமே எங்கள் அழகான மனிதர் (தலைமை அமைச்சர் மோடி பேசும் பாணியில் குரலை கற்பித்துக் கொள்ளுங்கள்) நிறைவேற்றித் தரவில்லை; அட போங்க நீங்க! நீங்க வேற தனியா நையாண்டி பண்ணிக்கிட்டு.  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,711 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.