Show all

அமெரிக்காவிற்கு வந்த சோதனை! அமெரிக்க அரசாங்கத் துறைகள் முடங்கிவரும் நிலையில், கடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. கடும் பனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஹர்வர்டு பல்கலைகழகமும் மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தற்போது இயற்கையான நிகழ்வு என்றால், கடந்த மூன்று கிழமைகளுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியைச் சேர்ந்த ஓர் மூத்த செனட்டர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

டிரம்புக்கு மிகவும் நெருக்கமான லிண்ட்ஸே கிரஹாம் என்ற அந்த செனட்டர், சில கிழமைகளுக்கு மீண்டும் சில துறைகளை இயக்குவது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு இடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்க துறைகள் தற்போது பகுதியளவு முடங்கியுள்ளதுதான் அமெரிக்க அரசாங்க வரலாற்றில் நடந்த மிக நீண்ட முடக்கமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் கடந்த இருபத்தி மூன்று நாட்களாக ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.

அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது வழக்கத்தை விட அதிக நாட்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் இல்லாததால் பூங்காக்களில் குப்பைகள் மலை போல குவிந்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.