Show all

தனிநாடாக இருந்து இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் சாதனை! வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை; தொடங்கியது முயற்சி

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார். 

காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டின் சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இத்திட்டத்தை அறிவித்த சிக்கிம் அரசு இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்படும். 

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் இணைந்தது. 

சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், மேற்கு வங்காளமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் தலைமைஅமைச்சர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு தகுதி கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. 

நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிமின் தலைமைஅமைச்சராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5விழுக்காடு சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். நான்கே மாவட்டங்கள்.

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.

குடியரசுத் தோழன் என்கிற ஒரே கட்சி தான் முதன்மை. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொது சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு மிகவும் முதன்மைத்;துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் நெகிழிப் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் நெகிழிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.

ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக காவலர்க்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது.

சிக்கிம் மாநிலம் நான்கு வருவாய் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்: கிழக்கு சிக்கிம், வடக்கு சிக்கிம், தெற்கு சிக்கிம் மற்றும் மேற்கு சிக்கிம் ஆகும். இம்மாநிலத்தின் பெரிய முதன்மை நகரங்கள் கேங்டாக், கெய்சிங், மங்கன் மற்றும் நாம்ச்சி ஆகும்.

சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,10,577 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.85விழுக்காடு மக்களும், நகரப்புறங்களில் 25.15விழுக்காடு மக்களும் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 81.42 விழுக்காடாக உள்ளது. 

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன், நேபாள மொழி மற்றும் சுமார் 10 வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.

சுற்றுலாத் துறை இம்மாநிலத்தின் ஒரு முதன்மையான வருவாய் ஈட்டும் துறை ஆகும். இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. 

இந்தியாவில், தன் மாநிலத்தின் தேவைக்கதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.