Show all

இலங்கையில் ஒரு தமிழகம் அரங்கேற்றம்!

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஒரு தமிழகம் அரங்கேற்றம்! ஆம் இலங்கையில்- தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையின், அச்சுப் பிரதிபோல் அரசியல் அரங்கேற்றம் நடந்திருக்கிறது.

1.இங்கே எடப்பாடி பழனிச்சாமி அங்கே மைத்ரிபால சிறிசேனா 2.இங்கே பன்னீர் செல்வம் அங்கே ராஜபக்சே 3.இங்கே தினகரன் அங்கே ரனில் விக்கிரமசிங்கே 4.இங்கே பாஜக நடுவண் அரசு அங்கே விடுதலைப் புலிகளை ஒழிக்க உதவிய நாடுகள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யாரை வீழ்த்தி அதிபர் பதவிக்கு மைத்ரிபால சிறிசேனா வந்தாரோ 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ராஜபக்சேவிற்காக ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்து மஹிந்தாவை தலைமை அமைச்சர் ஆக்கி இருப்பது இலங்கை மக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது அங்கே.

தமிழகத்தில் பன்னீர் செல்வத்திற்கு எதிராகத்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப் பட்டார் அங்கே ரனில் விக்கிரசிங்கே போல இங்கே தினகரன் ஒத்துழைப்பில்.

அங்கே எதிரிகள் ஒருங்கிணைவதற்கு நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், இங்கே சில மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் ஒருங்கிணைகிறார்கள். அங்கே எதிரி ராஜபக்சேவிற்கு அதிபருக்குத் துணையாக இன்று தலைமை அமைச்சர் பதவி. இங்கே அன்றே முதல்வருக்குத் துணையாக துணை முதல்வர் பதவி பன்னீர் செல்வத்திற்கு. 

இங்கே அத்துவானக் காட்டில் விடப்பட்டு அலைகழிக்கப்படும் தினகரன் போல அங்கே தற்போது ரனில் விக்கிரம சிங்கே அத்துவானக் காட்டில் விடப் பட்டிருக்கிறார். இங்கே தினகரன் போல அங்கே ரனில் விக்கிரம சிங்கே இன்னும் நிறைய அனுபவிக்க இருக்கிறார். இங்கே தினகரனுக்கும். அங்கே ரனில் விக்கிரம சிங்கேவிற்கு மக்கள்தாம் துணை.

இங்கே எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி நடுவண் பாஜக அரசு. அங்கே விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட ஆயுதஉதவி வழங்கிய நாடுகள். அண்மைக் காலமாக இலங்கையில், தமிழர்களின் கை ஓங்கி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த நாடுகளின் உளவு அமைப்புகளே சூத்திரதாரிகளாக இருந்து இன்;றைய இலங்கை அரசியல் நிலவரத்தை முன்னெடுத்திருக்கின்றன.

இங்கேயும் சரி அங்கேயும் சரி ஒரு பெரிய அரசியல் மாற்றம் தான் முடிவு செய்ய முடியும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அப்புறப் படுத்தப் பட்டால்தான் தமிழகத்திற்கு விடிவு. அங்கே அப்படி எளிதாக எந்த மாற்றத்தையும் முன்னெடுத்து விட முடியாது. இங்கே சூத்திரதாரியாக இருப்பது ஒரு கார்ப்பரேட் பினாமி கட்சி எளிதாக களையெடுத்து விடலாம். அங்கே சூத்திரதாரியாக இருப்பன இலங்கை விழுங்க நினைக்கும் ஏகாதிபத்திய நாடுகள்.

சிறிசேனாவின் அதிரடி மாற்றம் அரங்கேறும் நாள் வரை தன்னை விட பதவியில் குறைந்த இடத்தில் இருக்கும் சிறிசேனா தன்னை எதிர்ப்பார் என்றோ, அதிபர் தேர்தலில் தன்னை வீழ்த்தி வெற்றி காண்பார் என்றோ ராஜபக்சே நினைத்திருக்கவில்லை. அதிபர் தேர்தலில் ராஜபக்சேவிற்கு தோல்வியை பரிசாகத் தந்தார் சிறிசேனா. தன்னுடைய அதிகாரம், ராணுவம் மற்றும் காவல்துறை பலத்தை ராஜபக்சே பயன்படுத்திய போதும் தோல்வியே கிட்டியது. இதனால் ராஜகப்சேவின் அரசியல் சகாப்தம் முடிந்தது என்றே பலரும் கருதினர்.

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றார். சில மாதங்களிலேயே இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திர கட்சியும் கூட்டணி அமைத்து சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஒருங்கிணைந்த தேசிய அரசை அமைத்தனர். ஆனால் இந்த கூட்டணி அரசு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

முதல் இரண்டு ஆண்டுகள் இரண்டு தலைவர்களிடையேயும் நல்உறவு இருந்தது. இலங்கை மக்களும் ஜனநாயகத்தை உணரத் தொடங்கினர். ஊடகங்கள், மக்கள், பிரதிநிதிகள் என அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக உணர்ந்தனர். ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட்ட நிம்மதியும் அவர்களிடம் இருந்தது.

சிறிசேனா மற்றும் விக்ரமசிங்கே இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அண்டை நாடுகளான இந்தியா, விடுதலைப் புலிகளை ஒழிக்க உதவிய நாடுகளுக்கு இடையேயான நட்பை கையாள்வதில் தான் இருவருக்கும் அதிக வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணி பூசல்கள் பற்றி இருவருமே பொதுவெளியிலும் பேசத் தொடங்கினர்.

சிறிசேனா, ரணில் இடையேயான விரிசல் அதிகமானது ராஜபக்சேவிற்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இருவரிடையே மூட்டிய கலகம் வெற்றி கண்டது. ஆனால் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தன்னுடைய சொந்த வாழ்வு, அரசியலில் மிகச் சிரமம் எடுத்தே ரணில் சிறிசேனாவை அதிபராக்கினார்.

ராஜபக்சேவின் தூண்டுதல் பேரிலேயே அண்மைக் காலமாக சிறிசேனா ரணிலுக்கு எதிராக சில அறிக்கைகளை வெளியிட்டார் என்று கொழும்பு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ரா அமைப்பு தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளதாக சிறிசேனா கூறியதற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.