Show all

நிஜாம்வாரிசுகள்- பாகிஸ்தான்- இந்தியா, முக்கோண வழக்கு முடிவுக்கு வந்தது. இன்று 350 கோடியாக வளர்ந்திருக்கும் தொகைக்கானது

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணப்பரிமாற்றத்துக்கு இந்திய உதவியுடன், நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நீண்டகாலமாக இந்த வழக்கை லண்டன் அறங்கூற்றுமன்ற மொன்று விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது.

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நள்ளிரவில் இந்தியாவிற்கு விடுதலை அளித்து விட்டு விடை பெற்றது பிரித்தானிய அரசு.

பிரித்தானிய அரசு கொடுத்துவிட்டுச் சென்ற இந்தியாவில் ஏராளமான குளறுபடிகள். இந்தியா பிரித்தானிய ஆட்சியில் இருந்த போதும், இந்தியாவில் பிரித்தானிய அரசின் கீழ் இந்தியர்களே ஆளும் இரட்டை ஆட்சி முறை சில பகுதிகளில் நடைமுறையில் இருந்தது. 

அதே சமயம், இந்தியா விடுதலை பெற்ற போது, 565 தன்னாட்சி பெற்ற, மன்னர்ஆட்சிப் பகுதிகள் இந்தியாவில் இருந்தன. இவற்றை விடுதலை பெற்ற பிரித்தானிய இந்தியப் பகுதிகளோடு, பேச்சுவார்த்தைகள் மூலமும், இராணுவ நடவடிக்கை மூலமும் ஒருங்கிணைத்து, தற்போதுள்ள இந்தியாவை உருவாக்கினார்கள். 

அவற்றில் காஷ்மீர், ஐதராபாத், மைசூர், திருவாங்கூர், பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா, ஜுனாகத், ஜோத்பூர், ஜெய்சல்மர் ஆகியவை முதன்மையானவை. தமிழகத்தில் இருந்த புதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதியும் இந்தியாவில் இணைந்தது.

நிபந்தனையோடு காஷ்மீர் இணைந்ததும், அந்த நிபந்தனையில் காஷ்மீர் பெற்றிருந்த உரிமையை பாஜக அரசு முடித்துக் கொண்டதும் அண்மைக்காலச் செய்திகள்.

இந்தியா விடுதலை பெற்றதும், சில மன்னராட்சிப் பகுதிகள் பாகிஸ்தான் நாட்டுடனும் இணைந்தன. ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம், மிர் ஒஸ்மான் அலிகான், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சேர மறுத்துவிட்டார். 

அதனால், இந்திய படைகளுக்கு பயந்து, 1 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான தொகையை, பாகிஸ்தான் துணை தூதர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பாதுகாப்பாக இந்த தொகையை வைத்திருக்க அவர் கோரிக்கைவிடுத்தார். 

நிஜாமின் மன்னராட்சிப் பகுதியான ஹைதராபாத் இந்திய ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்திய ஒன்றியத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் சந்ததியினர், ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாம் என்ற பட்டப்பெயர் கொண்ட, முகர்ரம் ஜா மற்றும் அவரது தம்பி முபாக்கம் ஜா ஆகியோர் இந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடி பணத்தை மீட்க முயன்றனர். அப்போது பாகிஸ்தானும் இந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடியது.

அவர்கள் அனைவரும், பாகிஸ்தானுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு இந்திய அரசு உதவி செய்தது.

நிஜாம் மன்னராட்சிப் பகுதி பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் உயர் ஆணையராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையாக வளர்ந்துள்ள அந்த பணப்பரிமாற்றத்துக்கு நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக இந்த வழக்கை லண்டன் ராயல் அறங்கூற்றுமன்றம் விசாரித்து வருகிறது.

தனது பணம் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்தவுடனேயே, ஏழாவது நிஜாம் உடனடியாக பணத்தை திரும்ப வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டார். ஆனால், பணத்தை திரும்ப அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்த ரஹிம்தூலா, அது தற்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான பணம் என்று தெரிவித்தார்.

இதுதான் இருதரப்பினருக்குமிடையேயான நீண்டகால சட்டப்போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. பாகிஸ்தானின் நிலைப்பாட்டை எதிர்த்து, நிஜாம் தரப்பில் இந்தியா விடுதலை பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு, அப்போது பிரிட்டனின் உட்சபட்ச அறங்கூற்றுமன்றமாக கருதப்பட்ட ஹவுஸ் ஆப் லார்ட்ஸில் தொடரப்பட்ட வழக்கில், இறையாண்மையுள்ள நாடான பாகிஸ்தானை எதிர்த்து நிஜாம் தரப்பு வழக்கு தொடர முடியாது என்று தீர்ப்பு வெளிவந்தது. இருப்பினும், அந்த அறங்கூற்றுமன்றம் பாகிஸ்தானின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டு பணத்தை முடக்கியது.

அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்ட நாட்வெஸ்ட் வங்கி நிர்வாகம், இந்த பணப்பரிமாற்றத்தோடு தொடர்புடைய இருதரப்பினரில் யாருக்கு இது சொந்தமாகும் என்ற கேள்விக்கு சட்டரீதியிலான பதில் கிடைக்கும் வரை, அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்தது முதல் இப்போது வரையிலான 60 ஆண்டுகாலத்தில், அந்த பணத்தின் மதிப்பு, வட்டியுடன் சேர்த்து 35 மில்லியன் பவுண்டுகளாக பல்கிப் பெருகியுள்ளது.

இவ்வாறான சூழலில் பல்லாண்டுகாலமாக, லண்டன் ராயல் அறங்கூற்றுமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கினார் லண்டன் ராயல் அறங்கூற்றுமன்றத்தின் அறங்கூற்றுவர் மார்கஸ் ஸ்மித்.

அவர் இந்த பணமானது ஏழாவது நிஜாமுக்கும், அவரது பேரப் பிள்ளைகளுக்கும், எட்டாவது நிஜாமுக்கும் அவரது இளைய தம்பிக்கும், இந்தியாவுக்கும் உரியதென தீர்ப்பு வழங்கி உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,293.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.