Show all

குழந்தைகள் முகமூடிகளுடன் கொள்ளையர்கள்! பின்பக்கச் சுவரில் துளையிட்டு, திருச்சி நகைக்கடையில் நகைகள் கொள்ளை

திருச்சி லலிதா நகைக்கடையில், நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகள் முகமூடியை அணிந்து கொள்ளையடித்துள்ளனர்.

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபலமான லலிதா நகைக்கடை இயங்கி வருகிறது. மூன்று தளங்கள் உள்ள இந்தக் கட்டடத்தில், இன்று கீழ் தளத்தில் மற்றும் மேல் தளத்தில் இருந்த நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை ஆய்வு செய்கையில், அதிகாலை சுமார் 1 மணியளவில் குழந்தைகள் விளையாட்டிற்கு பயன்படுத்தும் முகமூடியுடன் கையுறை அணிந்து நுழைந்த இரு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளயடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

ஏறத்தாழ ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

நகைக்கடையின் பின்புறம் இருக்கும் கல்லூரி மைதானத்தின் வழியாக அவர் உள்ளே வந்துள்ளனர். மோப்ப நாய் தங்களை கண்டறியக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியும் அங்கே தூவியுள்ளனர்.

தடவியல் துறையினர் நகைக்கடையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். காவல்துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,293.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.