Show all

ராஜபக்சே ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும்: மங்கள! யுத்த காலத்தை போன்று ஒத்துழைப்பு வழங்குங்கள்: ராஜபக்சே

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதை உறுதி செய்யும் வகையாக- யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு; மஹிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் பேட்டியளித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறும் போது, 'மஹிந்த இலங்கையை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காலத்தில் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். கடந்த மூன்று கிழமைகளில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் கண்டு நொந்திருப்பார்கள்.

நாட்டின் தலைமை அமைச்சராக மஹிந்த கடமைகளைப் பொறுப்பேற்றால் அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வாழவேண்டி ஏற்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்' என தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விசயத்தினை தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இது மட்டுமே எனவும் இதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.