Show all

ஒரு தமிழச்சி அமெரிக்க அதிபராவதற்கான ஒளிமாயமான வாய்ப்புகள்!

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் வாழும் கமலா ஹாரிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.

இவர் ஒரு தமிழச்சி தாயிடம் தமிழ்ப்பால் அருந்தி வளர்ந்த தாய்மொழியால் தமிழச்சி. சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த கிழமை அமெரிக்காவில் இடைப் பட்ட  தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு அகவையில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்;தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்கவிருக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. அதற்காக அக்கட்சியின் சார்பாக கமலா தேவி ஹாரிஸ் தான் அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பாக டிரம்பிற்கு மாற்றாக வேறு ஒருவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏற்ற வேட்பாளர்களில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியில் இவருக்கு 70 விழுக்காடு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரிசையில் அதே கட்சியில் உள்ள அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த துளசி கப்பார்டின் (அகவை 37) பெயரும், அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள நபர்களில் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது 4வது இடத்தில் இருப்பதாகப் பட்டியல் இடப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான களப் பணிகளில் கமலா ஈடுபட்டு வருகிறார். அதற்காக நிதி வசூலில் இப்போதே இறங்கியுள்ளாராம். மேலும் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகும் அனைத்து முயற்சிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார். இவற்றை பார்க்கும்போது, கமலா தேவி ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஒருவேளை விடா முயற்சியால், தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு கமலா வெற்றிப்பெற்றால்: 

1.முதல் அமெரிக்க பெண் அதிபர் ஆவார். 2.இவர் இனவழி அடிப்படையில் ஜமைக்கா பெண் என்றாலும் கூட, மொழிவழி அடிப்படையில் தமிழச்சி ஆவார். ஆம் இவரின் தாய் தமிழச்சி, தந்தை  ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். 3.முதல் கருப்பிண பெண் அதிபர் என்றும், சிறப்பு அம்சங்கள் கொண்டு வெற்றிப்பெற்றவராக திகழ்வார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.