Show all

உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை காட்டம்! யார் வேண்டுமானாலும் பஜனை நடத்துவதற்கானதா தஞ்சை பெரிய கோவில்

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாழும் கலை என்றொரு அமைப்பை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யமுனை ஆற்றங்கரையில், மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். 

அது போன்றதொரு நிகழ்ச்சியை அவர், தஞ்சை பெரிய கோவிலில் நடத்தவிருப்பதாக அறிந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், மூலமாக உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

அதில் யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோயில் என்ற சிறப்பைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், இதுபோன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பைப் பாதுகாக்கத் தவறும் நடவடிக்கை. மேலும் இதே நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யமுனை ஆற்றங்கரையில், இதே போன்றதொரு நிகழ்ச்சியை மாசு ஏற்படுத்தும் விதமாக நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவரின் இந்த நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்த உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை, மத்திய தொல்லியல்துறை அதிகாரி இன்று அணியமாக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை சார்பில், கோவில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோவிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது அறநிலையத்துறை பரிந்துரைத்ததால் மட்டும் எப்படி அனுமதி வழங்கினீர்கள்?

நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் முழு வரைப்படத்தை பெற்ற பின்பு தான் அனுமதி வழங்கப்பட்டதா? என்று கேள்விகளை எழுப்பிய அறங்கூற்றுமன்றம், இது ஏற்க தக்கதல்ல, தஞ்சை பெரிய கோவில் பாரம்பரியமானது என்பதால் அறங்கூற்றுமன்றம் தலையிடுகிறது என்று கூறியது. பின்னர் நாள் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.