Show all

ஒரு நாள் முதல்வர் மாதிரி, இரண்டாம் இடத்திற்கு முந்தினார் அதானி! உலகப் பணக்காரர்கள் நேரலையில்

உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், உண்மைநேரம் எனப்படும் நேரலையில் மதிப்பிட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டில் கொஞ்ச நேரம் முதல்வன் படத்து, ஒரு நாள் முதல்வர் மாதிரி, இரண்டாம் இடத்திற்கு முந்தினார் அதானி

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசான் அதிபர் ஜெப் பெசாஸை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற தகுதியை கவுதம் அதானி கொஞ்ச நேரம் பிடித்திருந்தார்.

ஆனால், சிறிது நேரம் மட்டுமே இந்த இடத்தை அவரால் தக்க வைக்க முடிந்தது. உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், உண்மைநேரம் எனப்படும் நேரலையில் மதிப்பிட்டு வருகிறது. பன்னாட்டு அளவிலான தொழிலதிபர்களின் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் முன்னேறி செல்வதும், பின்னோக்கி நகர்வதுமாக உள்ளனர்.

இந்தப் பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 21.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இவருக்கு அடுத்த இடங்களில், லூயி வுட்டான் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசாஸ் ஆகியோர் இருந்தனர். நான்காவது இடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இடம் பெற்று இருந்தார்.

இந்நிலையில், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு சரிந்தது. அந்த நேரத்தில், அதானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது. இதையடுத்து, அதானி நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு உயர்ந்தார். அவரது சொத்து மதிப்பு 12.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிலை சற்று நேரம் வரை மட்டுமே நீடித்தது. அதானியின் சொத்து மதிப்பு லேசாக சரிந்ததை தொடர்ந்து, அவர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட, பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ஜெப் பெசாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்த உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி எட்டாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 7.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,374.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.