Show all

மீண்டும் நிலவுப்பயணம்! இன்று இரவு 11.47 மணிக்கு 3 மனித பொம்மைகளை நிலவுக்கு அனுப்புகிறது அமெரிக்காவின் நாசா

அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலன் இந்திய நேரப்படி இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: புவியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான உயிர்வளி, நீர் போன்றவை இல்லாத கோள் நிலவு ஆகும். எனவே மனிதன் அங்கு சென்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. இத்தகைய நிலையில் நிலவுக்கு யார் முதலில் செல்வது என்ற ஆய்வில் வல்லரசுகளாக திகழ்ந்த ரஷ்யாவும், அமெரிக்காவும் ஈடுபட தொடங்கின. 

அதன் முதன் முயற்சியாக பூமியை சுற்றி ஸ்புட்னிக் எனும் விண்வெளிக் கப்பலை 65 ஆண்டுகளுக்கு முன்பு மிதக்க விட்டது. அதன் தொடர்ச்சியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு ககாரின் என்ற வின்வெளி வீரரை விண்கலன் அனுப்பி பூமியைச் சுற்றிவிட்டு பத்திரமாக திரும்பி வர செய்து சாதித்தது ரஷ்யா. 

இதற்குப் போட்டியாக அதே ஆண்டில் ஷெப்பர்டு என்ற விண்வெளி வீரரை விண்கலன் மூலம் புவியைச் சுற்றிவர செய்தது அமெரிக்கா. இரண்டு ஆண்டுகளுக்கு பின் வாலண்டினா தெரஸ்கோவா என்ற இளநங்கையை பூவியைச் சுற்றி பறக்க செய்து பதிலடி கொடுத்தது ரஷ்யா. 

இரு வல்லரசுகளுக்கு இடையே நடந்த இந்த விண்வெளி பயணப் போட்டியில் தனது நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்டிராங் என்பவரைச் நிலவில் காலடி பதிக்க வைத்து சாதனை சிகரத்தை அடைந்தது அமெரிக்கா. 

நிலவுக்;கு மனிதனை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை நாளது 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5071 (15.07.1969) அன்று தொடங்கியது அமெரிக்கா. அதற்கான ஒத்திகைகளும் முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மறுநாள் இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி முனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 வீரர்களுடன் நிலவை நோக்கி, அப்பல்லோ 11 என்ற விண்கலன் செலுத்தப்பட்டது. மறு நாளே தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், சரியான திசையில் விண்கலன் பயணித்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் புவிக்கு தகவல் கொடுத்தனர்.

மணிக்கு 3500 மைல் வேகத்தில் சென்ற விண்கலன் மூன்றாவது நாளில் நிலவை நெருங்கியது. நான்காவது நாள் நிலவு  மண்டலத்தினுள் புகுந்த விண்கலன் நிலவைச் சுற்றத் தொடங்கியது. ஐந்தாம் நாள் மாலை நிலவுக்கு அனுப்பட்ட முதன்மை விண்கலனில் இருந்து ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நிலவில் இறங்கக் கூடிய பூச்சி போன்ற வடிவம் கொண்ட 'ஈகிள்' வண்டியினுள் சென்றனர். இரவு 12 மணி நெருங்கவிருந்த வேலையில் இந்தப் பூச்சி வண்டியானது முதன்மை விண்கலனில் இருந்து வெளிவந்து நிலவினைச் சுற்றியது.  சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின் நிலவினை அடைந்தது அந்த வண்டி. அதனுள்ளேயே இருந்தவாறு ஓய்வு எடுத்தனர் வீரர்கள் இருவரும்.

ஆறாவது நாள் காலை சரியாக 8.26 மணிக்கு பூச்சி வண்டியில் இருந்த வெளியே வந்த ஆம்ஸ்ட்ராங் நிலவில் தன் கால் தடத்தினை பதித்தன் மூலம் 'நிலவில் கால் பதித்த முதல் மனிதன்' என்ற  அழியாத வரலாற்றினைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தார். நிலாவில் சிறிது தூரம் நடந்த இருவரும் அங்கிருந்த கல், மண் ஆகியவற்றை சேகரித்ததுடன், தங்கள் நாட்டு கொடியினையும் அங்கு  நட்டார்கள்

உலகம் வியக்கும் சாதனையினைப் படைத்த விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் மீண்டும் பூச்சி வடிவ வண்டிக்குள் சென்று முதன்மை விண்கலனுக்குள் நுழைந்தனர். அங்கிருந்து பூமியை நோக்கி பறந்த அந்த விண்கலன் ஒன்பதாம் நாள் இரவு 10 மணி 19 மணித்துளிகளுக்கு பாதுகாப்பாக கொலம்பியா கடலில் வந்து இறங்கியது. உலகின் உயர்ந்த சாதனையினை படைக்க உதவிய 'அப்பலோ 11' ஐ தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது. இதற்கு செலவிடப்பட்ட தொகை 1.74 லட்சம் கோடி ரூபாய்.
 
இந்த நிகழ்வு நடந்தபோது அமெரிக்காவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் அது உண்மையில்லை என்ற பேச்சு கிளம்பியது. அந்த பேச்சுகளுக்கு ஆதரவாக, நிழற்படம் எடுத்தது நம்பும் வகையாக இல்லை. காற்று இல்லாத நிலவில் கொடி அசைவது எப்படி போன்று பற்பல வினாக்கள் இன்று வரை தொடர்ந்து வைக்கப்பட்டே வருகிறது.

இவ்வாறன நிலையில்தான் அந்த வரலாற்று நிகழ்வுக்குப்பிறகு 53 ஆண்டுகள் கழித்து, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 என்ற விண்கலத்தை நாசா இன்று நிலாவுக்கு அனுப்புகிறது. 

53 ஆண்டுகளுக்கு பின்னர் நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து நாசா செயல்படுத்த உள்ளது. நிலாவுக்கு மனிதனை அனுப்பி அங்கேயே தங்க வைத்து நீண்டகால சோதனையை மேற்கொள்ள உள்ளது. 

இதற்கான திட்டத்தை நாசா செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை மாலை 6:03 மணியளவில் இந்த செயற்கைகோளை ஏவ திட்டமிட்டப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு இயந்திரம் செயலிழந்ததால் அந்த முயற்சி தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இயந்திரப் பழுது சீர் செய்யப்பட்டதாக இயல்அறிவர்கள் அறிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து இன்று நாசா வெளியிட்ட அறிக்கையில், இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் ஆர்டெமிஸ் 1 விண்கலத்தை ஏவுவதற்கான இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்திய நேரப்படி இந்த விண்கலன் இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 

நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பான எஸ்.எல்.எஸ். விண்கலன், ஓரியன் விண்கலம் மற்றும் இதர அமைப்புகளை ஒருங்கிணைந்த முதல் விண்கலனாக இது உள்ளது. 

மனிதர்கள் நிலாவுக்கு செல்வதற்கான சூழல் இருப்பதைக் கண்டறியும் சோதனைக்காக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 பொம்மைகள் விண்கலத்தின் மூலம் நிலாவுக்கு அனுப்பப்பட உள்ளது. 

இதன் மூலம் விண்வெளி கதிர்வீச்சுகளை மனித உடல்கள் உணர்வது குறித்து சோதிக்கப்படும். இந்த ஆர்டெர்மிஸ் 1 விண்கலன் 42 நாட்களில் 1.3 மில்லியன் மைகள் பயணிக்கும். இந்த விண்கலனில் கொண்டு செல்லப்படும் ஓரியன் விண்கலத்தை நிலவின் மேற்பரப்புக்கு அருகே 60 மைல்கள் தொலைவில் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.