Show all

எப்படி எடுத்துச் செல்லும் உலகத்தை! ஆங்கிலப் புத்தாண்டு 2023

கணிய அடிப்படையில் ஆங்கில ஆண்டு 2023 இன் கூட்டு எண் ஏழு ஆக அமைகிற நிலையில், செல்வவளமைக்கான ஆண்டாக அமையும் ஆங்கிலப் புத்தாண்டு 2023. உலகின் பலநாடுகளின் பணப்புழக்கம் மிகும் வகையில் கட்டுமானங்களும் வேலைவாய்ப்பும் பெருகும். அராபிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் வகைக்கு புதிய கட்டுமானங்களை முன்னெடுக்கும் ஆண்டாக ஆங்கிலப் புத்தாண்டு 2023 அமையும் என்று உறுதிப்பட கூறலாம். 

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று உதயம். தமிழர் காலக்கணக்கில் அறுபது நாழிகை ஒரு நாள். தமிழர்களின் முதலாவது நாழிகை காலை ஞாயிற்று உதயத்தில் தொடங்குகிறது. 

தமிழர்களின் பொங்கல் திருவிழா, ஆடிப்பெருக்கு விழா, மற்றும் திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்கள் அனைத்;தும் அதிகாலையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாழிகைக் கணக்கு இந்த விழாக்களிலும் தமிழர் தம் முன்னேற்றக் கலைகளான நிமித்தகம், கணியம், மந்திரம் ஆகிய இயல்கணிப்புகளில்- தமிழ்த் தொடராண்டின் நடப்பு ஆண்டான 5124 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆரியரின் நாள் தொடக்கம் நண்பகல் நேரமாகும். ஐரோப்பியர்களின் நாள் தொடக்கம் நள்ளிரவு நேரம். நடைமுறையில் இந்த ஐரோப்பிய காலக்கணக்கே நிருவாகத்தில் பயன்பட்டு வருவதால் இந்தக் கிறித்துவ ஆண்டு முறையில் 2022வது கிறித்துவ அல்லது ஆங்கில ஆண்டு இன்று நள்ளிரவு 23.59க்கு முடிந்து நள்ளிரவு 24.00மணியில் 2023வது புத்தாண்டு பிறக்கிறது. 

இந்த ஆங்கிலப் புத்தாண்டு 2023 உலகத்தை எப்படி எடுத்துச் செல்லப் போகிறது என்கிற கணிய அடிப்படையிலான கணிப்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், உழைப்பிற்கும், உலகமொழிகளில் தமிழுக்கும் சிறப்பான ஆண்டாக, செல்வவளமைமிக்க ஆண்டாக இது அமையும் என்று உறுதிப்பட தெரிவிக்கலாம். 

செல்வவளமை என்று பேசுகிற போது, உலகின் பலநாடுகளின் பணப்புழக்கம் மிகும் வகையில் கட்டுமானங்களும் வேலைவாய்ப்பும் பெருகும். அராபிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் வகைக்கு புதிய கட்டுமானங்களை முன்னெடுக்கும்.

பெண்கள், குழந்தைகள், உழைப்பு, வேலைவாய்ப்பு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு பேரளவாக ஆதரவாக அமையும். அந்த அடிப்படையில் உழைப்பை கொண்டாடும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உலகம் சிறப்புத் தகுதி வழங்கக் காத்திருக்கும் ஆண்டாக ஆங்கிலப் புத்தாண்டு 2023 அமையும். 

இலங்கை அமைதியை நோக்கித்திரும்ப, பேரளவான தமிழர் ஆதரவு வெளிப்படையாகத் தெரியும் வகையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு 2023 ஒத்துழைக்கும்.

இந்த அண்டில் இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகள் நடுவிலும் திமுகவின் பங்களிப்பு பேரளவாக எதிர்பார்க்கப்பட்டு இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஆங்கிலப் புத்தாண்டு 2023 வழங்கக் காத்திருக்கிறது.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு 2023- பேரினவாதம், பழமைவாதம், மதவாதம், ஆணாதிக்கவாதம், சாமியார்கள் ஆகியவைகளுக்கு எதிராக, கேள்விக்குறியாகவும் நெருக்கடியாகவும் அமையும். அராபிய நாடுகளில் பெண்கள் குழந்தைகளின் மதிப்பு மீட்டெடுக்கப்படும்.

உலகப்பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கிற இந்த ஆங்கிலப் புத்தாண்டு 2023 அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அறைகூவலாக அமைவதை அமெரிக்கா பேரளவாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மொத்தத்தில் இந்த ஆண்டு பழமைவாதங்களுக்கு எதிரான முனைப்பான ஆண்டு என்கிற நிலையில், முனைப்புக்கு அடையாளமான குழந்தைகளைப் பேரளவாக கொண்டாடும் ஆண்டாகவும், குழந்தைகளின் கருவறைகளான பெண்கள் மதிப்பு கூடும் ஆண்டாகவும், உழைப்பிற்கு உண்மையான மதிப்பு அளிக்கப்படும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,480.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.