Show all

ஆங்கில புத்தாண்டு 2023ஐ முதலாவதாக வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2023ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது. 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று உதயம். தமிழர் காலக்கணக்கில் அறுபது நாழிகை ஒரு நாள். தமிழர்களின் முதலாவது நாழிகை காலை ஞாயிற்று உதயத்தில் தொடங்குகிறது. 

தமிழர்களின் பொங்கல் திருவிழா, ஆடிப்பெருக்கு விழா, மற்றும் திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்கள் அனைத்;தும் அதிகாலையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாழிகைக் கணக்கு இந்த விழாக்களிலும் தமிழர் தம் முன்னேற்றக் கலைகளான நிமித்தகம், கணியம், மந்திரம் ஆகிய இயல்கணிப்புகளில்- தமிழ்த் தொடராண்டின் நடப்பு ஆண்டான 5124 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆரியரின் நாள் தொடக்கம் நண்பகல் நேரமாகும். ஐரோப்பியர்களின் நாள் தொடக்கம் நள்ளிரவு நேரம். நடைமுறையில் இந்த ஐரோப்பிய காலக்கணக்கே நிருவாகத்தில் பயன்பட்டு வருவதால் இந்தக் கிறித்துவ ஆண்டு முறையில் 2022வது கிறித்துவ அல்லது ஆங்கில ஆண்டு இன்று நள்ளிரவு 23.59க்கு முடிந்து நள்ளிரவு 24.00மணியில் 2023வது புத்தாண்டு பிறக்கிறது. 

எளிமைபாட்டுக்காக நாளின் 24 மணிநேரம் நண்பகலுக்கு முந்தைய நேரம் பனிரெண்டு மணி, நன்பகலுக்கு பிந்தைய நேரம் பனிரெண்டு மணி என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023வது புத்தாண்டு இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்குப் பிறக்கப் போகிறது. 

நாம் வாழும் புவி ஞாயிற்றைச் சுற்றி வருவதுதான் ஆண்டுக் கணக்காகும். நாம் வாழும் புவி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வது நாள் கணக்கு ஆகும். நாம் வாழும் புவி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது ஞாயிறு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதான தோன்றத்தை நாம் காண்கிறோம். இந்த சுற்றுவகையில் மேற்கில் இருந்து கிழக்காக அமைந்த வரிசையில் ஒவ்வொரு நாடாக ஞாயிற்றைச் சந்திக்கும் நிகழ்வு நிகழும். 

ஆகையினால் இந்தியாவின் அலகாபாத் திட்ட நேரத்தை கடைபிடிக்கிற நமக்கு தற்போது நான்கு மணி முப்பது மணித்துளிகள் ஆகும். நாம் ஆங்கிலப் புத்தாண்டு 2022ஐ எதிர்கொள்ள இன்னும் ஏழு மணி முப்பது மணித்துளிகள்  உள்ளன. 

அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2023ஐ எதிர்கொள்கிற நாடாகவும் அமைகிறது. 

நியூசிலாந்தில் தற்போது ஆங்கிலப் புத்தாண்டு 2023 பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 

2023-ஆம் ஆங்கில ஆண்டை குதுகலமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்கின்றதாக செய்தி வெளியாகி வருகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர் நியுசிலாந்து மக்கள். 

இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்படும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,479.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.