Show all

அடங்க மறுப்பது ஓர் தற்காப்பு இயல்பு! அடக்குவது, தடை படுத்துவது, விதிமுறைகள் அமைப்பதில் கவனம் தேவை

அடக்குவது, தடைபடுத்துவது, விதிமுறைகள் அமைப்பது என்பவைகளை சமுதாய பாதுகாப்புக்கு என்றுதாம் அதற்கான நிருவாக அமைப்புகள் கட்டமைக்கின்றன. அவைகளை மீற முயல்கிற, அடங்க மறுப்பது தற்காப்புக்கானது என்பதை நிருவாக அமைப்புகள் புரிந்து கொண்டிருக்கும் போது குற்றங்களுக்கான காரணம் சுழியமாகின்றன.

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகிலேயே குற்றங்கள் மிகக் குறைவாக நிகழும் நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக அளவில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 4 பேர் கொலை செய்யப்படும் நிலையில், தங்கள் நாட்டில் அந்த குற்ற விகிதம் 0.5 ஆக மட்டுமே உள்ளதாக கத்தார் அமைச்சகத்தின் பொதுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கொள்ளைச் சம்பவங்கள் உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு 100 ஆக உள்ள நிலையில், கத்தாரில் அந்த எண்ணிக்கை 25 ஆக மட்டுமே உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல், தாக்குதல் போன்ற குற்றச்சம்பவங்கள் உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 8 ஆக உள்ள நிலையில், கத்தாரில் அது 5 ஆக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியா என்று கத்தாரின் பொருளாதார நிலையை கண்டறிய முயன்றால்- கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது. என்கிற தகவல் கிடைக்கிறது.

அதே சமயம்- சவூதி அரேபியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் ஆகும்.

கொஞ்சமான குறையும், அதிகமான நிறையும் கொண்ட நாடாக கத்தார் பாரட்டப் படுவதற்கு அது தொடர் வருமானத்திற்கு வாய்ப்பு பெற்ற நாடாக உள்ளது என்பதைத் தவிர வேறில்லை.

எந்த ஒரு நாட்டிற்கும் தொடர் வருமான வாய்ப்பு என்பது இயற்கை கொடையாகவோ, முயற்சியின் விளைவாகவோ எட்டப்பட்டிருக்க வேண்டும். 

அப்படி இல்லாத போது விதவிதமான குற்றங்களுக்கு களமாகி விடும் நாடு. ஒரு நாட்டிற்கு அதிகாரம், தடை, விதிமுறைகளை மீறுகிறவர்களைத் தண்டிப்பதற்கான காவல்துறை, அறங்கூற்றுமன்றம், அம்பலப் படுத்தும் ஊடகங்கள் எனும் அமைப்புகளை விட கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், தொழில் வணிக அமைப்புகளே அதிகம் தேவை. 

நாமோ ஒரு கல்வியாளன், மருத்துவன் உருவாவதற்கு எதிராக நீட், கேட் என ஆயிரம் தேர்வுகள் இரண்டாயிரம் தடைகளை வைத்திருக்கிறோம். ஆனால் பல விதமான குற்றவாளிகள் உருவாவதற்கு ஏராளமான ஓட்டைகளை வைத்திருக்கிறோம். அவர்களே கூட ஓட்டையும் போட்டுக் கொள்கிறார்கள் (லலிதா நகைக்கடையில் கொள்ளை)

சூர்யா நடித்த அயன் திரைப்பட பாணியில் போலி முடி எனப்படும் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த நபர், கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக வெள்ளிக்கிழமை அன்று கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கமுக்கத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இளைஞரின் தலை வேறுபாடாகத் தென்படவே, அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்து சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த இளைஞரின் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கக் கட்டி இருந்தது. தங்கக் கட்டியை மறைத்து வைப்பதற்கு ஏதுவாக, தலையின் நடுப்பகுதியில் அந்த இளைஞர் மொட்டை அடித்திருந்தார்.

அந்த இளைஞர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நவ்சாத் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோ தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்.

நாட்டில் கல்விக்கு எதிரான தடைகளை முற்றாக அகற்றினாலே செல்வவளம் சாத்தியமாகும். குற்றங்கள் சுழியமாகும். 

பழந்தமிழ் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன், 
“வெள்ளத்தால் போகாது வெந்தணலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உமல்வதேனோ!”
படியுங்கள் மக்களே என்று கெஞ்சி பாடல் இயற்றுகிறான். இன்றைய ஆட்சியாளர்களோ படிக்காதே என்று நீட்டை நீட்டுகிறார்கள் சட்ட அமைப்புகளின் துணையோடு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,297.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.