Show all

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார்: சிறிசேனா

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

 

இது தொடர்பாக விசாரணை நடத்தவும், அதிபர் சிறிசேனா தலைமையிலான புதிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனர் சயீத் ராத் அல் ஹூசேன் அண்மையில் இலங்கைக்கு வந்தார். அவர், ராஜபச்சேயிடம் விசாரணை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனால் எரிச்சல் அடைந்த ராஜபக்சே,

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு மனித உரிமைகள் கமிஷனை அனுமதித்ததை ராஜ்ஜிய ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கூறுகின்றனர். உண்மையைச் சொல்லப்போனால் இது சர்வதேச அளவில் இலங்கையை காட்டிக் கொடுக்கும் செயல்.

என்று விமர்சித்தார்.

இதுபற்றி கொழும்பில் இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

அதிபர் தேர்தலில் நான் அடைந்த வெற்றி காரணமாகத்தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல் ராஜபக்சே தடுக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலின்போது தன்னை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் நிறுத்திவிடுவார்கள். அங்கு மின்சார நாற்காலியில் உட்கார வைத்து மரண தண்டனையை எனக்கு நிறைவேற்றி விடுவார்கள் என்றெல்லாம் ராஜபக்சே பகிரங்கமாக புலம்பினார்.

 

அதிபர் தேர்தலில் மக்கள் ஓட்டுபோட்டு என்னை வெற்றி பெறச் செய்ததால் அப்படிப்பட்ட நிலைமை அவருக்கு ஏற்படவில்லை. இதனால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் ஏறி பதில் அளிக்க வேண்டிய அவசியமும் ராஜபக்சேவுக்கு இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.