Show all

உலகைச் சுற்றி வருவதற்கு சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள்

உலகைச் சுற்றி வருவதற்கு முன்னோட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள் வந்தனர்.

கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த வீராங்கனைகள் வர்த்திகா ஜோஷி, பிரதீபா ஜாம்வால், சுவாதி, விஜயதேவி, பாயல் குப்தா ஆகிய 5 பேர் ‘ஐ.என்.எஸ். மதே’ என்னும் இந்திய கடற்படைக்கு சொந்தமான பாய்மர படகில் அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி வர பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

 

இதன் முன்னோட்டமாக இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து மாதே பாய்மரப் படகு மூலம் கடந்த 9-ந்தேதி புறப்பட்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை துறைமுகம் வந்தனர். வீராங்கனைகளைக் கடற்படை தலைமை அதிகாரி (தமிழகம் மற்றும் புதுச்சேரி) அலோக் பட்நாகர் வரவேற்றார். இவர்கள் அடுத்து கொச்சி சென்று அங்கிருந்து கோவா செல்கின்றனர்.

தங்களுடைய உலக பயணம் குறித்து வீராங்கனைகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடற்படை வீராங்கனைகள் வரலாற்றில் முதல் முறையாக உலகை பாய்மர படகில் சுற்றி வர இருக்கிறோம்.

 

உலகப் பயணம் என்பதால் காலநிலைக்கு தகுந்தாற்போல பயணம் மேற்கொள்வது, உடல் மற்றும் மனதளவில் தயார்படுத்திக்கொள்வது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சி பெற்று இருக்கிறோம். இதுகுறித்து கமாண்டர்கள் திலீப் தோண்டே, அபிலாஷ் டோமி ஆகியோரிடம் ஆலோசனை பெற்றுள்ளோம்.

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த பயணத்தில் நாங்கள் எந்தவித சவால்களையும் சந்திக்கவில்லை. உலகச் சுற்றுப்பயணம் செல்வதற்கு எங்களை முழுமையாக தயார்படுத்திவிட்டோம் என்று நம்புகிறோம்.

 

எங்கள் பயணம் தொடங்கி திட்டமிட்டபடி முடிவடையும்போது, உலகை பாய்மர படகில் சுற்றி வந்த பெண்கள் என்ற பெருமை எங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

56 அடி நீளமும், 16 அடி அகலமும் கொண்ட ஐ.என்.எஸ். மதே பாய்மர படகில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. பாய் மரத்தின் உயரம் 21 மீட்டர் ஆகும்.

 

இதே பாய்மர படகில் கமாண்டர் திலீப் தோண்டே 2010-ம் ஆண்டிலும், லெப்டினென்ட் கமாண்டர் அபிலாஷ் டோமி 2012-ம் ஆண்டிலும் இந்தியாவில் இருந்து கடல் பயணம் செய்து உலகை சுற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.