Show all

ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள்! சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்

புலி ஆண்டுக்காக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில்- ஒரு பக்கம் புலி, மறு பக்கம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகள் அமைந்த  சிறப்புக் காசுகள் வெளியிடுகிறது சிங்கப்பூர்.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சிங்கப்பூர். நாணய ஆணையம், அடுத்த ஆண்டு புலி ஆண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிட உள்ளது. அவைகளை வாங்க இன்னும் 27 நாட்கள் முன்பதிவு செய்ய முடியும்.

புலி ஆண்டான அடுத்த ஆண்டில் அதற்கான பத்து சிறப்பு நாணயங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட உள்ளது. இந்த நாணயங்கள் அடுத்த ஆங்கில ஆண்டின் முதல் நாளிலிருந்தே கிடைக்குமாம்.

பாசிர் பாஞ்சாங்கில் சீனத் தொல்கதை மற்றும் நாட்டுப்புறக் கதைக் காட்சிகளுக்கான பல்வேறு சிலைகளுடன் புகழ்பெற்று விளங்கிய ஹா பார் வில்லா கலாசார பூங்காவின் பின்னணியுடன் புலி உருவம் நாணயத்தின் ஒரு பக்கம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

மற்றொரு பக்கம் பொதுவாக நாணயத்தில் காணப்படும் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுடன் கூடிய சிங்கப்பூர் சின்னம் 2022 ஆண்டுடன் இருக்கும்.

பத்து நாணயங்களும் வெவ்வேறு மாழைக் கலவை மற்றும் வடிவங்களில் தயாரிக்கப்படும். வெள்ளி நாணயம் என்று அழைக்கப்படும் நிக்கல் பூசப்பட்ட, 41 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் ஒவ்வொன்றின் விலை இரண்டு டாலர்கள்.

மேலும், 60 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட தங்க நாணயத்தின் விலை இருநூறு டாலர். இதேபோல, தயாரிப்பைப் பொறுத்து வெவ்வேறு விலைகளில் நாணயங்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு நாணயத்தின் வடிவம் மற்றும் மாழைக் கலவையைப் பொறுத்து 100 முதல் 50,000 வரையிலான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும்.

தனித்தனி நாணயங்கள் தவிர, வெவ்வேறு வடிவம் மற்றும் மாழை நாணயங்களை உள்ளடக்கிய சிறப்புத் தொகுப்பும் கிடைக்கும்.

சிங்கப்பூர் நாணய ஆலை இவற்றை விற்பனைக்கு விடும். இந்த சிறப்பு நாணயங்களை வாங்க விரும்புவோர் இதன் இணையத் தளத்தில் இன்னும் 27 நாட்கள் முன்பதிவு செய்ய முடியும்.

இருப்புக்கு அதிகமாக பலர் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டுதரப்படும். என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,073.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.