Show all

இலங்கையில்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் கிழக்கு மாநில அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சங்கமன் கண்டி பிரதேசத்தின் முதன்மை வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான பழங்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலன சின்னங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.பத்தமநாதன், இந்த தொல்லியல் சின்னங்கள் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குரியவைதான் என்பதை, உறுதிப்படுத்தினார்.

மலைகளிலும் மலைகள் அருகே காணப்படுகின்ற இந்தப் பழங்காலச் சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றினை பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதிமிக்க பழங்காலச் சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்கின்றன

இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், புதைகுழிகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான பழங்காலச் சின்னங்களை இன்றும் காணக் கிடைக்கின்றன.

அங்கே கிடைக்கப்பெற்ற பானையோடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்து காணப்பட்டதாகவும், இதனை தென்னிந்திய ஆய்வாளர்களும் அக்காலத்தில் உறுதி செய்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

சங்கமன் கண்டி பிரதேசத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.