Show all

ஓர் ஆண்டுக்கு கெடாதாம்! அமெரிக்காவில் புதியவகை ஆப்பிள் அறிமுகம். உடம்பின் இயல்பியக்கம் கெடாமல் இருக்குமா?

அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிளை, இருபது ஆண்டுகால ஆய்வில் கண்டறிந்து  அறிமுகம் செய்திருக்கிறார்கள். மனிதர்களின் பருவமடைதல், நல மகப்பேறு ஆகியவற்றில் உடம்பின் இயல்பியக்கத்தை கெடுக்காமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் உணவு ஆர்வலர்கள்.

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பழங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆப்பிள் பழமாகும். எப்போதும் முதல் இடம் வழைப்பழத்திற்குதாம்.
இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆப்பிளை முதல் இடத்திற்கு கொண்டு வருவது கனவு போல. அதன்பொருட்டு புதிய வகையிலான ஆப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 ஆண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 ஆண்டுகளை செலவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 5099ம் தமிழ்த் தொடராண்டில் (ஆங்கிலம்-1997) வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகம் சார்ந்து வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் இருக்கும் உழவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாசிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், “இந்த வகை ஆப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்” என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,355.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.