Show all

பூச்சாட்டியாச்சு, நம்ம ஊர்விழா, எல்லோரும் கொண்டாட்டத்திற்கு அணியமாகுங்க! உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிப்பு

பூச்சாட்டியாச்சு, நம்ம ஊர்விழா, எல்லோரும் கொண்டாட்டத்திற்கு அணியமாகுங்க! ஆனால் மாரியம்மன் தேர்த்திருவிழா அல்ல. தேர்தல் திருவிழா உள்ளாட்சித் தேர்தல் திருவிழா.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீங்க வெளி நாட்டில் இருக்கலாம், அல்லது வேலை விசயமாக வெளியூரில் இருக்கலாம், பெண்கள் தங்கள் புகுந்த ஊரில் இருக்கலாம், ஆண்களோ பெண்களோ வெளியூருக்கு குடி பெயர்ந்து இருக்கலாம் ஆனால் எல்லாருக்கும் சொந்த ஊர் என கண்டிப்பாக இருக்கும். எனக்கு சொந்த ஊர் பிடிக்காது என சொல்லுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்த ஊரில் அதுவும் கிராமமாக இருந்தால் நிச்சயம் அந்த ஊரில் திருவிழா தான் முதன்மை வகிக்கும். அந்தத் திருவிழாவிக்கு  இப்ப எங்க ஊர்ல பூச்சாட்டியாச்சு.

என் சொந்த ஊர் ஈரோடு. இங்கே மாரியம்மனுக்கு பூச்சாட்டியாச்சு. எங்க ஊர் கோயில் கம்பம் நட்டு விட்டால் எங்களுக்கொல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். கம்பம் நடுதல், சாமி ஊர்வலம், முப்போடு, பாரா நடத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூசை, கிடா வெட்டுதல், மஞ்சள் நீராடுதல் என 15 நாட்களுக்கு ஒரே ஆட்டம் பாட்டமாக இருக்கும்.

இது தவிர இரவு நேரங்களில் பட்டிமன்றம், நாடகம், பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என களை கட்டும். கம்பம் நட்டு விட்டால் அசைவ உணவுகள் சாப்பிடமாட்டோம், உணவகத்தில் சாப்பிட மாட்டோம், எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்து விடுவோம் என்ற ஊர்கட்டுப்பாடு உண்டு.

மாரியம்மன் கோயிலில் திருவிழாக் காலங்களில் மிக முதன்மையானது, அதுவும் இளைஞர்கள் விருப்பப்படுவது. கம்பத்து ஆட்டம் தான். எங்கள் ஊரில் என் நண்பனின் தாத்தாதான் எங்கள் கம்பத்து ஆட்டத்தின் ஆசிரியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 4 வரிசையாக நின்று கொண்டு தாத்தாவின் சொல்படி ஆடுவோம். 1ம் அடி, 2 ம் அடி, 3ம் அடி என 13 வகையான ஆட்டங்களை எங்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். இந்த 13 வகையான ஆட்டமும் எனக்கு அத்துப்பிடி. கம்பம் நட்ட முதல் நாள் ஆட்டம் ஆட மாட்டோம் இரண்டாம் நாளில் இருந்து இரவு 8 மணிக்கு தொடங்கினால் 12 மணி வரை ஆட்டம் களை கட்டும். இந்த ஆட்டத்தைக் காண ஊர் மக்கள் எல்லாம் திரண்டு இருப்பார்கள். அதுவும் என் நண்பர்களின் தோழிகள் ஆட்டத்தை காண வந்து இருந்தால் ஆட்டம் இன்னும் களை கட்டும்.

கம்பத்து ஆட்டம் ஒவ்வொரு ஊருக்கும் வேறுபாடு உண்டு. ஒரு சில ஊரில் கம்பத்தை சுற்றி ஆடுவார்கள் எங்கள் ஊரில் கம்பத்தின் முன் தான் ஆடுவோம். கம்பத்து ஆட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டம் காவடி சிந்து என்னும் ஆட்டம் தான். இந்த ஆட்டத்தை மட்டும் மேளம் அடிப்பவர்களை 3 முறைக்கு மேல் இதே ஆட்டத்தை கேட்டு ஆடுவாம். இந்த ஆட்டம் ஆடும் போது எங்க ஊர் கம்பத்து ஆட்டத்து ஆசிரியர் தாளம் சொல்லுவார் தகிம்தா தகிம்தா தகிம்தா தந்தனத்தோம் தகிம்தா இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

கம்பத்து ஆட்டம் 13 நாட்களுக்கு நடக்கும். 13 வது நாள் செவ்வாய் அன்று இரவு காவிரி கரையில் இருந்து சாமி ஊர்வலமாக புறப்பட்டு கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கையும் ஊர்வலம் நடைபெறும். கரகாட்டத்தையும், குறவன் குறத்தி ஆட்டத்தையும் பார்க்க கூட்டம் அலைமோதும். சுமார் 1 மணி நேரத்திற்கு வாணவேடிக்கை நடக்கும் சுற்று வட்டார கிராமங்களில் இருப்பவர்கள் எல்லாம் அங்கு கூடியிருப்பர். அடுத்த நாள் புதன்கிழமை காலை முப்போடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். கம்பம் நட்ட நாள் முதல் பூசாரி (பார்ப்பனியர் அல்லர் தமிழர்) கோயிலில் தான் தங்கி இருப்பார் அவர் தான் முப்போடு எடுப்பார் அன்று இரவு பாரா நடக்கும் நிகழ்ச்சி நடக்கும் பாரா நடப்பது என்றால் கோயிலைச்சுற்றி விடியும் வரை நடக்கவேண்டும் இதற்கு பெயர் தான் பாரா நடத்தல்.

வியாழக்கிழமை தான் திருவிழா நாள் நானும் என் நண்பர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால் திருவிழா அன்று தான் ஊருக்குச் செல்லோம். அன்று காலை தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கும் அந்த ஊர்வலத்துக்கு முன் ஒரு 3 மணி நேரம் எங்க ஆட்டத்தை பட்டையக்கிளப்புவோம். அன்று தான் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும் அழகு குத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு ஊரில் நாடகம், பாட்டுகச்சேரி, கூத்து போன்ற எதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.

வெள்ளிக்கிழமை காலை கம்பத்தை எடுத்து ஆற்றில் விட்டு விடுவர் பின்பு சாமி ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டு விழா நடை பெறும். அன்று ஊரில் போற வர்றவங்க எங்களுக்கு பிடிச்சவங்க என ஆண் பெண் பேதமின்றி எல்லார் மேலேயும் தண்ணீர் ஊற்றுவோம், மஞ்சள் நீர் என்ற பெயரில் சாயம் கலந்து கலக்கி விடுவோம். நண்பர்களைச் சாலையில் போட்டு உருட்டுவோம் அன்றுடன் திருவிழா நிறைவுபெறும்..

திராவிடக் கழகத்தின் தொடக்கத்திற்கு பிறகு, தமிழகத்தில் தேர்தல் கொண்டாட்டம், அதுவும் உள்ளாட்சித் தேர்தல் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக இருக்கும்.

தெரு தெருவுக்கு கட்சி அலுவலகம், ஊர் முழுக்க கொடிக்கம்பங்கள், மாலை வரைக்கும் ஊர்வலங்கள், மாலைக்கு மேல் பலகுரல்மன்னர்களின் கலைநிகழ்ச்சிகள். திரும்பிய பக்கமெல்லாம் தேர்தல் சின்னங்கள்.

கோபலா.. ஏன் ஐயா.. எங்கே போற.. வாக்கு செலுத்த.. எந்த சின்னத்திலே செலுத்துவ? உதயசூரியன் சின்த்திலே செலுத்துவேன் என்று சிறுவர்களின் முழக்கங்கள் காதைக் கிழிக்கும்.

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு அந்தக் கொண்டாட்டத்திற்கு பூச்சாட்டியிருக்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம். மார்கழி.11 மற்றம் மார்கழி.14 ஆகிய நாட்களில் (டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30) இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை, மார்கழி.17 அன்று (ஜனவரி 2) நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாரத் தலைவர்களுக்கான தேர்தல் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த உப்பு சப்பில்லாத செய்திக்கா, இத்தனை பீடிகை என்று கேட்கிற கேள்வி காதில் விழத்தான் செய்கிறது. ஆனாலும் திருமணத்தில்தான், மணமகனும், மணமகளும் தலைவன், என்பதாக ஒவ்வொரு மனிதருக்கும் அந்த தலைமைத்துவ வாய்ப்பு கிடைத்து மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாகிறது. அவ்வாறக உள்ளாட்சித் தேர்தலில்தான் நிறைய பேர்களுக்கு தலைமைத்துவம், மக்களின் அங்கீகாரம் என்பதெல்லாம் சாத்;தியமாகிறது. பாட்டாளிமக்கள் கட்சிக்கும், தேமுதிகவிற்கும் அடையாளத்தை வழங்கியது இந்த உள்ளாட்சித் தேர்தல்கள்தாம். இந்தத் தேர்தல் நாம் தமிழர்கட்சிக்கும், தமிழக வாழ்வரிமைக் கட்சிக்கும். பல்வேறு தமிழ் அடையாளக்கட்சிகளுக்கும் அடையாளத்தை தரப்போகிறது. ஆனாலும் நோட்டாவுக்கு கீழிருக்கிற தமிழ்விரோத சக்தியான பாஜகவுக்கும் கொஞ்சம் அடையாளம் கிடைக்கும் என்பதுதான் கொஞ்சம் வருத்தம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,354.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.