Show all

துடுப்பாட்டத் தொடர்பான விவாதம், இந்து முஸ்லிம் மோதலாக முற்றியது பிரிட்டனில்

இரண்டு மதங்களை சேர்ந்த முதன்மை ஆட்களை அழைத்து அமைதிகாக்க அறிவுறுத்துமாறு கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பதட்டத்தை தணிக்க அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இருபத்தி மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய கோப்பை துடுப்பாட்டத் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5 மட்டை இலக்குகள் வேறுபாட்டில் வீழ்த்தியது. 

துபாயில் நடந்த ஆசிய கோப்பை துடுப்பாட்டத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது கிழக்கு லாய்செஸ்டரில் எதிரொலித்தது. அங்குள்ள வடஇந்தியர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.

அப்போது- அண்மைக்காலமாக வடஇந்தியாவில் பாஜக முன்னெடுத்து வரும் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் ஒலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களுக்குள் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

இது தொடர்பான காணொளிக் காட்சிகளை காவல்துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். இதில் ஹிந்துக்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாக ஹிந்து தரப்பினரும், தங்களின் வழிபாட்டு தலம் தாக்கப்பட்டது என இஸ்லாமியர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மதங்களை சேர்ந்த முதன்மை ஆட்களை அழைத்து அமைதிகாக்க அறிவுறுத்துமாறு கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பதட்டத்தை தணிக்க அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வன்முறையில் ஈடுபட்டதற்காக இதுவரை 15 பேர்களை பிரிட்டன் காவல்துறை கைது செய்துள்ளது. 

இந்த நிலையில் பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'லெய்செஸ்டர் நகரத்தில் இந்திய மக்கள் மீதும் ஹிந்து மதத்தலங்கள் மற்றும் அடையாளங்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பிரிட்டன் அதிகாரிகளுக்கு இந்தப்பாட்டைக் கொண்டு செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்.' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 54 விழுக்காடாக உள்ளது. ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான அளவில் வாழ்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை 7.4 மற்றும் 7.2 விழுக்காடாக ஆக உள்ளது. அடுத்தப்படியாக சீக்கியர்கள் 2.4 விழுக்காட்டு பேர்கள் உள்ளனர். இங்கு சொல்லிக் கொள்ளும்படி யூதர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,377.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.