Show all

விளையாட்டுத்தனமாக விமானத்தை கடத்திய சிறுவர்கள்! பாதுகாப்பாக தரையிறங்கச் செய்தனர் காவலர்கள்; அமெரிக்காவில்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தற்போது நன்றி செலுத்தும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கொண்டாட்டங்களில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தா நகரில் உள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது, 14, 15 அகவை நிரம்பிய இரு சிறுவர்கள், டிராக்டர் ஓட்டிக்கொண்டு விமான நிலையப் பகுதிக்குள் வந்தனர். விமானத்தில் விமானி இல்லாமல் விமானம் நிற்பதை அறிந்த இரு சிறுவர்கள் விமானத்தை எடுத்து ஓடுபாதையில் செலுத்திப் பறந்தனர். இதைப் பார்த்த விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் விமான நிலைய காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன்பின் விமான நிலைய காவலர்கள் அந்த இரு சிறுவர்களிடம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசி தரையிறங்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தரையிறங்கும் முறை குறித்தும், எப்படித் தரையிறங்க வேண்டும் என்பது குறித்தும் கூறி பத்திரமாகத் தரையிறங்கினார்கள். இந்த இரு சிறுவர்களும் ஏறக்குறைய 24 மைல் அளவுக்குப் பறந்தபின் தரையிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து உத்தா கவுண்டி காவல் துறையினர் தங்களின் முகநூல் பக்கத்தில் கூறுகையில், '14, 15 அகவை கொண்ட இரு சிறுவர்கள் உத்தா கிழக்குப்பகுதியில் உள்ள ஜென்சன் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தை கடத்திச் சென்றனர். இருவரும் 24 மைல் சுற்றளவுக்கு தாழ்வாகப் பறந்தனர்.

பின் காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி அவர்கள் இருவரும் விமானத்தை தரையிறக்கினார்கள்.  பாதுகாப்பாகத் இறங்கும் வழிமுறைகளையும் தெரிவித்தோம்.

தரையிறங்கியபின் இரு சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அறங்கூற்றுமன்ற உத்தரவின் பெயரில் வெர்னல் நகரில் உள்ள சிறுவர்கள் கண்காணிப்பு மையத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்' எனத் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.