Show all

தமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்களாம்! சொல்வது உயர் அறங்கூற்றுமன்றம்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை உயர் அறங்கூற்று மன்றம் தமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் உழைக்க விரும்புவதில்லை. எனவே தான் சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. 

தமிழக அரசு இயலாதவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைகளைக் கொடுப்பதை உயர் அறங்கூற்றுமன்றம் வரவேற்கிறது. ஆனால் எல்லோருக்கும் ஏன் கொடுக்க வேண்டும் என்று தான் கேள்வி எழுப்புகிறது. 

கடந்த நிதி ஆண்டில் 2110 கோடி ரூபாயை தமிழக அரசு இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் செலவு செய்திருக்கிறது. 2000 கோடி ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. இதனால் எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்களை செய்யலாம். இந்தத் தொகையை ஒரு முதலீடாகவே கருத முடியவில்லை. செலவுக் கணக்கில் தான் ஒவ்வொரு ஆண்டும் எழுத வேண்டி இருக்கிறது.   

இந்த தொகை ஒரு பெரிய செலவு தொகையாகவே தொடர்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்தச் செலவு தொகை பெருகிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைய வில்லை. இதை உண்மையாகவே தேவைப்படும் நபர்களுக்குத் தான் போய் சேர்கிறதா என்பதை அறங்கூற்றுமன்றம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. 

தமிழக அரசு யாருக்காக இந்தத் திட்டத்தை நடத்துகிறது. உண்மையாகவே ஏழை எளிய மக்களுக்குத் தான் நடத்துகிறது என்றால், யார் ஏழை என கணிக்க தமிழக அரசிடம் ஏதாவது கணக்கு இருக்கிறதா? 

ஒருவேளை ஏழை என்கிற பெயரில் எல்லோருக்குமே இந்த இலவச அரிசி வழங்கப்படுகிறது என்றால், அது ஏழை அல்லாதவர்களையும் அரசு வளப்படுத்துவதாகத் தானே ஆகிறது. எனவே யார் எல்லாம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என கணக்கெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு இட்டிருக்கிறது. 

இதுவரை தமிழக அரசு இலவச அரிசி திட்டத்துக்காக ஏதாவது கணக்கெடுப்புகள், மதிப்பீடுகள் செய்திருந்தால் அதையும் சமர்பிக்குமாறு உயர் அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இனி இலவச அரிசி ஏழைகளுக்கும், வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

யார் ஏழைகள், ஏழைகளை எப்படி வகைப்படுத்துகிறார்கள், எத்தனை வகைபாட்டு ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினால் என்ன செலவாகும் என்பதையும் அறங்கூற்று மன்றத்திடம் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், இலவச திட்டங்களில் இருந்து வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களை நீக்குவது தொடர்பான விவரங்களை பெற கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

இந்த அரிசியை வாங்க குடும்பத்தில் ஒருவர் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த அரிசி பல குடும்பங்களில் சோறு சமைக்கப் பயன் படுத்தப் படுவதில்லை. இட்லி தோசை மாவுக்காக மட்டுமே பயன் படுத்தப் பட்டு வருகிறது. மிகவும் வருமானம் குறைந்த பிரிவினர் மட்டுமே இந்த அரிசியை வேறு வழியில்லாமல் சோறு சமைக்கப் பயன் படுத்துகிறார்கள். ஏனென்றால் அரசு வழங்கும் அரிசியின் தரம் அந்த அளவுதாம் இருக்கும். இந்த அரிசி மிக குறைந்த தரம், குறைந்த தரம் உடைய அரிசி மட்டுமில்லாமல், சேமிப்புக் கிடங்கில் உலர்த்தாமல் இருப்பு வைக்கப் பட்டு தரம் குறைப்பு செய்யப் பட்ட அரிசியாகும்.

இந்த அரிசியை வாங்கத் தேவையிருப்பவர்கள் மட்டுமே, மெனக்கெட்டு, இரண்டு மணிநேரம் காத்திருந்து இந்த அரிசியை வாங்கிச் செல்கிறார்கள். 
ஆனால் தமிழக அரசு தருகிற இலவசக் கல்வியை பெற மக்கள் முண்டியடிப்பதில்லை. ஏனென்றால் முண்டியடிக்காதவர்கள் இலவச அரிசிக்காக காத்திருப்பவர்கள் அல்ல. 

அவர்கள் அரசின் தொழில் வாய்ப்பு, கல்வி நிறுவனங்கள், மேல்நிலைக்கல்வி, வங்கிகள், வங்கி கடனுதவி, அரசு ஒப்பந்தங்கள், மருத்துவ நிறுவனங்கள், உயர் மருத்துவம், ஊடகங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தையும் அனுபவித்து வருபவர்கள்.  

தமிழக அரசின் மூன்றாண்டுகளுக்கு முந்தைய கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை: 
அரசு தொடக்கப் பள்ளிகள் 23928, தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் 64855.
நடுநிலைப் பள்ளிகள் 7260, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் 50508.  
உயர்நிலைப் பள்ளிகள் 3044, உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் 27891.
மேனிலைப் பள்ளிகள் 2727. மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் 73616 பணியாற்றுகின்றனர். 

இந்நிலையில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 800 பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

தமிழக மக்கள் சோம்பேறிகள் இல்லை. அரசு தரும் அரிசி தமிழக மக்களின் ஒரு விழுக்காடு உணவுத் தேவையைக் கூட நிறைவு செய்ய முடியாது. இந்த அரிசி உழவர்களிடம் கொள்முதல் செய்யப் படுவதால், ஏழை மக்களுக்கு மட்டுமல்ல உழவர்களுக்கும் ஆதரவு தரும் திட்டமாகும். 

அரசு பள்ளிகளை, எந்தக் குடும்பம் இலவசக் கல்விக்காகவும், சத்துணவுக்காகவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதோ அந்தக் குடும்பங்களே இலவச அரிசிக்காகவும் வரிசையில் நிற்கின்றன.

இந்தக் குடும்பங்களுக்கு அரசு வழங்குகிற கல்வியும், அரிசியும் இலவசமல்ல. அவர்களுக்கு அரசு வழங்க மறுத்த, தொழில் வாய்ப்பு, கல்வி நிறுவனங்கள், மேல்நிலைக்கல்வி, வங்கிகள், வங்கி கடனுதவி, அரசு ஒப்பந்தங்கள், மருத்துவ நிறுவனங்கள், உயர் மருத்துவம், ஊடகங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரம் ஆகிய, 'மறுத்த வாழ்க்கைக்கான' இழப்பீடு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.