Show all

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன! யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விளக்கம்

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று இலங்கையின் 71 ஆவது விடுதலை நாள். இன்றைய நாளில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், எமக்கு எப்போது விடுதலை? எனக் குறிப்பிட்டுள்ள பதாதகையும் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த விடுதலைநாள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளது:

இலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும், உள்நாட்டுப் போர் உலக நாடுகளின் ஒத்துழைப்போடு முடித்து வைக்கப் பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை. 

தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பாரம்பரிய நிலங்கள் சூறையாடப்படுகின்றன. தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கபடுகின்றதன புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது, என மாணவர் ஒன்றியும் புகார் கூறியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டுவருகின்ற நிலையில் யாருக்கு விடுதலை கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்தச் சட்டம் போர் முடித்து வைக்கப் பட்டும் நீக்கப்படாமல் அமுலில் இருப்பதானது காலங்காலமாக தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும். 

இலங்கை விடுதலை அடைந்த நாள்தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்பு செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன.

இந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு இறுதிப் போர். இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கி பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள் என்று மாணவர் ஒன்றியம் புகார் கூறியுள்ளது.

இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சி கட்டமைப்பினையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது. என்கிறது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.