Show all

விருதுக்கு பொருத்தமற்ற நபர் என்ற வகையில் ஆங் சான் சூகியின் விருது பறிக்கப்பட்டது

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

      ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (25.08.2017) ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

      மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக சில நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

      முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

      வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.

      பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்தார்.

      ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என ஆங் சான் சூகியிடம் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

      இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் ஆங் சான் சூகியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மியான்மர் நாட்டுக்கு வந்துள்ளார்.

      இந்நிலையில், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விவகாரத்தில் பாராமுகமாக இருந்த அந்நாட்டு அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி-க்கு பிரிட்டன் அரசால் அளிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் சுதந்திர விருது பறிக்கப்பட்டது.

      இதுதொடர்பாக, நேற்றிரவு நடைபெற்ற ஆக்ஸ்போர்ட் நகர கவுன்சில் கூட்டத்தில் தமிழ்தொடர்ஆண்டு-5099ல் (1997) ஆங் சான் சூகி-க்கு அளிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் விருதினை பறிக்கும் தீர்மானத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

      மியான்மர் நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்கியா மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதால் ஆங் சான் சூகி-க்கு அளிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் நகரின் மிக உயரிய கவுரவத்துக்குரிய விருதினை பறிக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் மூலம் ரோஹிங்கியா மக்களுக்கான நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவாக நமது சிறிய குரலை பதிவு செய்துள்ளோம்.

      முன்னர் மியான்மர் நாட்டில் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கும் ஒடுக்குறைக்கும் எதிராக வெகுண்டெழுந்த சகிப்புத்தன்மை, மற்றும் உலகமயம் தொடர்பான பிரதிபலிப்புகள் ஆங் சான் சூகியிடன் காணப்பட்டதால் இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

      ரோஹிங்கியா மக்கள் வசித்துவந்த கிராமங்களில் உள்ள வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட காட்சிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கிடைத்துள்ளன. இந்த நடவடிக்கையை இன அழிப்புக்கான உதாரணமான பாடப் புத்தகம் என ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிட்டுள்ளது.

      ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துவரும் ஆங் சான் சூகி, ரோஹிங்கியா இனப் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்களையும் பொய் குற்றச்சாட்டு என கூறி வருகிறார்.

      மனிதநேயமிக்க, வன்முறைக்கு எதிராக பாராமுகமாக இருப்பவர்களைக் கவுரவிப்பதால் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் ஆக்ஸ்போர்ட் நகரின் நீண்டகால பாரம்பரியம் மற்றும் நமது நன்மதிப்புக்கு களங்கம் நேரிடும் என்பதால் ஆங் சான் சூகி-க்கு முன்னர் அளிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் சுதந்திர விருது பறிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-      தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,620

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.