Show all

இணையத்தை கலக்கும் இப்படியும் ஒரு காணொளி! தப்பி ஓடிய கைதிகளைத் துரத்தி ஓடும் அறங்கூற்றுவர்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் அறங்கூற்றுமன்ற அறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை, அறங்கூற்றுவரே துரத்திப் பிடித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திற்கு உட்பட்ட செஹாலிஸ் நகர அறங்கூற்றுமன்றத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய டேனர் ஜேக்கப்சன் மற்றும்  கோடே ஹோவர்ட்  என்ற இரு விசாரணை கைதிகள்  அணியப் படுத்தப்பட்டனர். 

விசாரணையின் நடுவே திடீரென அறங்கூற்றுமன்ற அறையில் இருந்து கைதிகள் இருவரும் தப்பியோடினர். இதனால் அறங்கூற்றுமன்ற அறையில் பதட்டம் ஏற்பட்டது. அனைவரும் ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்தனர். 

துளியும் தாமதிக்காத அறங்கூற்றுவர் பசார்ட்  தனது அறங்கூற்றுவர் அங்கியை கழற்றி விட்டு கைதிகளைத்  துரத்திக் கொண்டு ஓடினார். இரு கைதிகளிலொருவரான ஜேக்கப்சன் வேகமாக ஓடிய நிலையில், ஹோவர்ட் கொஞ்சம் மெதுவாக ஓட, அவரை அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் அறங்கூற்றுவர் பாசார்ட் வளைத்துப் பிடித்தார். 

அதே சமயம் சுதாரித்த காவலர்கள் ஜேக்கப்சனையும், அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் மடக்கிப் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இது தொடர்பான கண்காணிப்பு படக்கருவி காட்சிகள் வெளியாகி இணைய ஆர்வலர்களுக்கு சுவையூட்டி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.