Show all

களைகட்டப் போகிறது ஆடி பதினெட்டு மேட்டூரில்! நடப்பு ஆண்டில்

இந்த ஆண்டு ஆடி பதினெட்டு மிகச்சிறப்பாக அமையும் என்று மேட்டூரைச் சுற்றியுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். 

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. முந்தாநாள் காலை 100.44 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை 105.81 அடியாக உயர்ந்தது. இன்று நீர்மட்டம் மேலும் 4½ அடி உயர்ந்து 110.14 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தால் 3 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளாவான 120 அடியை மீண்டும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு ஆடி பதினெட்டு மிகச்சிறப்பாக அமையும் என்று மேட்டூரைச் சுற்றியுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். 

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி அமையும் ஆண்டுகள் எல்லாம் மேட்டூரில் ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக அமைவது வழக்கும். இந்த ஆண்டும் அந்த வகையாக களைகட்டப் போகிறது ஆடி பதினெட்டு மேட்டூரில். 

மேலும் ஆடி பதினெட்டில் அணை நிரம்பினால் தஞ்சை உழவர் பெருமக்களுக்கும் கொண்டாட்டந்தான். இந்த விளைச்சல் ஆண்டு, அவர்களுக்கு நீர்பற்றாக்குறை இல்லாத விளைச்சல் ஆண்டாக அமையும் என்ற நிலையில் காவிரி வடிகால் பகுதி உழவர்களும்; மகிழ்ச்சியில் உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,309.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.