Show all

மக்கள் போராட்டம் மட்டும் முடிவுக்கு வருகிறது இலங்கையில்

அதிபர் மாளிகை, தலைமைஅமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிவரும் பொதுமக்கள் நேற்று ஒப்புக் கொண்டனர். 

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மக்கள் போராட்டத்திற்கான தீர்வாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே புதன் கிழமையன்று தான் பதவி விலகுவதாக உறுதி அளித்து இருந்தார். 

ஆனால், திடீர் திருப்பமாக, மாலைத்தீவுக்குச் தப்பி சென்றார். இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்ட கோத்தபய, சிங்கப்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 7:00 மணிக்கு சென்றடைந்தார். 

கோத்தபய வருகை குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கோத்தபய ராஜபக்சே, தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் எங்களிடம் தஞ்சம் கேட்கவும் இல்லை, நாங்கள் அளிக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கோத்தபய இலங்கை பாராளுமன்ற பேரவைத்தலைவர் மகிந்தா யாபா அபேயவர்தனேவுக்கு, மின்அஞ்சல் வாயிலாக தன் பதவிவிலகல் மடலை அனுப்பி வைத்தார். இந்தக் மடல் சட்டப்பாடாக ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரபாடாக இன்று உறுதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, மாலத்தீவின் பேரவைத்தலைவர் முகமது நஷீத் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இனி அந்நாட்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகரும் என நம்புகிறேன். அவர் இலங்கையில் இருந்து கொண்டே பதவி விலகாமல் தொடர்ந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பாடுகள் தொடர்பாக, முன்னாள் தலைமைஅமைச்சர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் மீது இலங்கை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணை முடிவடையும் வரை நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம் என, மகிந்தாவும், பசிலும் உச்ச அறங்கூற்றுமன்றத்துக்கு நேற்று உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வன்முறையை கைவிடுமாறு இலங்கைசேனை நேற்று வேண்டு கோள் விடுத்தது. மீறினால், விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு எச்சரித்தது. மேற்கு மாகாணத்தில் நேற்று காலையில் விலக்கிக் கொள்ளப்பட்ட ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்தது. அதிபர் மாளிகை, தலைமைஅமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் நேற்று ஒப்புக் கொண்டனர். 

தங்கள் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேறும் வரை, பழைய பாராளுமன்ற மற்றும் கலே பேஸ் திடலை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,310.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.