Show all

சென்னை சென்டிரலில் ரூ.2கோடியே 67லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை சென்டிரலில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தோ-மியான்மர் எல்லைப்பகுதியில் இருந்து வெளிநாட்டு தங்கக் கட்டிகள் கொல்கத்தா வழியாக சென்னைக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக நடுவண் அரசின் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

துகவலைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தை சேர்ந்த 6 அதிகாரிகள் அடங்கிய தனிப்படை ஒன்று ரெயில் மற்றும் விமான நிலையங்களில் உள்ள பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையில், இந்தக் கடத்தலுக்கு மூளையாக கருதப்படும் நபர் கொல்கத்தா-சென்னை இடையே அடிக்கடி விமானச் சேவையை அதிகம் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் மற்றொரு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கக் கடத்தலுக்கு மூளையாக கருதப்பட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் லாவகமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக நடத்தும் ‘எக்ஸ்ரே’ எந்திரம் மற்றும் இதர சோதனைகளில் சிக்கி கொள்ளாதபடி பல்வேறு தொழில்நுட்பத்துடன் சூட்கேசில் மறைத்து வைத்து இந்தியாவுக்குள் தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

 

ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளைக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர், கொல்கத்தாவில் கடந்த 10-ந் தேதி அன்று வேறு சிலரிடம் கொடுத்து ஹவுரா மெயிலில்(வ.எண்.12839) அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று அதிகாலை கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த ஹவுரா ரெயிலில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதிரடி சோதனையில், 5 பேர் இந்த வெளிநாட்டு தங்க கட்டிகளைக் கடத்தி வந்ததை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் சேக் முகமது, சசிகுமார், மூசா ஆகிய 3 பேர் கொண்ட ஒரு குழு 166 கிராம் எடையுள்ள 24 காரட் கொண்ட 18 தங்க கட்டிகளை ‘பேண்ட்’ மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர்.

கிருஷ்ணன், உசேன் முகமது ஆகிய 2 பேர் கொண்ட மற்றொரு குழு சூட்கேசில் 35 வெளிநாட்டு தங்க கட்டிகளைக் கடத்தி கொண்டு வந்துள்ளனர். இந்த 2 குழுவிடம் இருந்து மொத்தம் 8.8 கிலோ எடையுள்ள 53 வெளிநாட்டு தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனுடைய மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 67 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்துக்காகவே இந்தத் தங்கக் கட்டிகளை கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வர சம்மதித்ததாக தெரிவித்தனர்.

 

மேலும் பிடிபட்ட 5 பேரில் கிருஷ்ணன் என்பவர் நடுவண் அரசின் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார் என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.

தங்கக் கட்டிகளைக் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்டவரையும், தங்கத்தைக் கடத்தி வந்த 5 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

‘வெளிநாட்டு தங்க கட்டிகளை மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வந்து விற்பனை செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது’

என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.