Show all

50 ஆண்டுகால காங்கிரஸை காலி செய்தவர்கள் நாங்கள்; காவி எங்களை என்ன செய்யும்

50 ஆண்டுகால காங்கிரஸை மண்ணில் புதைத்தவர்கள் நாங்கள்; காவி எங்களை என்ன செய்துவிட முடியும் என சசிகலாவின் கணவர் நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

     தமிழ் மண்ணில் காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைத்தவர்கள் நாங்கள். காவி என்னதான் எங்களை செய்ய முடியும்? என்று அதிமுகவின் பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

     தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடராஜன் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தி 50 ஆண்டுகள் ஆட்சியில் அமராமல் இருப்பதற்கு அடித்தளமிட்டார் அண்ணா. அதன் பின்னர் திராவிட இயக்கங்கள் தான் 1967-ல் இருந்து 2017 வரை ஆட்சி செய்து வருகின்றன. காங்கிரசை வேரோடும், வேரடி மண்ணோடும் புதைத்து அடித்தளமிட்டு இருக்கிறோம்.

     தமிழகத்தில் தற்போது காங்கிரசின் நிலை சுழிதான். அழித்த காங்கிரசை மீண்டும் உயிர்ப்பித்த கொடுமை கருணாநிதியைத்தான் சாரும். எங்களுக்கு அல்ல. நாங்கள் பதவி, பட்டங்கள் பற்றி கவலைப்படவில்லை.

     காவி என்ன செய்யும்?

50 ஆண்டுகளால காங்கிரசால் முடியாததை, காவி செய்து விடப்போகிறதா? பிரதமர் மோடி நல்லவர் தான். ஆனால் சிலரின் பேச்சை கேட்டுக்கொண்டு அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

     விசமிகளை நம்பி, சாதி, வேறுபாடுகள் இல்லாமல் அமைதியாக உள்ள தமிழகத்தில் ஆட்சியை சிலர் உடைக்க நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது.

     தமிழகத்தை காவிமயமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். எங்களை கவிழ்த்தால் மீண்டும் வருவோம். அழித்தால் மீண்டும் வருவோம்.

     அதிமுக சாதிக்கு உட்பட்டு அரசியல் செய்யவில்லை. சாதி, மத பேதமின்றி தான் இருந்து வந்தது. இப்போதும் அப்படி தான் இருந்து வருகிறது.

     சாதிமத பேதம் இல்லாத தமிழகத்தை நீங்கள் உடைக்கப்பார்க்கிறீர்கள். அ.தி.மு.க.வையோ, அ.தி.மு.க. ஆட்சியையோ உடைக்க முடியாது. இதற்கு பிரதமர் மோடி இடம் கொடுத்துவிடக்கூடாது.

     காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க முடியவில்லை. தமிழகத்தில் சல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசை கலையுங்கள் என்று சுப்பிரமணியசாமி கூறுகிறார். சல்லிக்கட்டு தமிழ் மக்களின் கலாசாரத்தோடு ஒன்றிப்போன ஒன்று. அதை எப்படி மாற்ற முடியும். அதில் கை வைக்கும் அரசு தூக்கி எறியப்படும். எனவே மோடி இது போன்ற மோசடி செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

     இந்து அமைப்புகளால் முடியாது. தமிழகத்தை வேறு படுத்திக்காட்டினால் உங்களை வேறுபடுத்த எங்களுக்கு எத்தனை காலம் ஆகும். ஆட்சிக்கு வர இயலாத நிலையில் உள்ள அவர்கள் எங்களை பார்த்து குடும்ப ஆட்சி என்கிறார்கள். இந்து அமைப்புகள் எது வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.