Show all

அரசியல்வாதிகளே! செத்தா ஒட்டுத்துணி கூட உடன் வராது: மயில்சாமி ஆவேசம்

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘செத்தா உடம்புல போட்டிருக்குற துணி கூட உடன் வராது’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                சல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளது. அலங்காநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் சல்லிக்கட்டை ஆதரித்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களைக் காவல்துறையினர் வாடிப்பட்டி, சோழவந்தான் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அப்பகுதியினர் போராடி வருகின்றனர்.

                ‘தங்களுக்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; போராடிய இளைஞர்களுக்கு உணவு கொடுத்ததற்காக கைது செய்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்’

என கோரி அப்பகுதியினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

                இதற்கிடையே, சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து  நடிகர் மயில்சாமி வலையொளியில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆவேசமாக தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.

                அலங்கா நல்லூரில் சல்லிக்கட்டு நடக்கனும். நீதியரசர் சொன்னதற்காக தமிழ்நாட்டு மக்கள் அதனை மதித்து தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தமிழன் என்ற முறையில் பேசுகிறேன். இந்தியனாக எனக்கு ஓட்டுரிமை இருக்கிறது. இந்தியக் குடிமகன் தனது உரிமையை எங்கு வேண்டுமானாலும் பேசலாம்.

                அந்த நீதிமன்ற உத்தரவுக்கு இந்தியாவே தலை குனிய வேண்டும். இந்தியனாக தலை குனிய வேண்டும். முக்கியமாக தமிழக அரசு ரொம்பவே தலை குனியனும்.

                மக்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசு ஆறுதல் கூட கூற வேண்டாமா?  முனுசாமி விமர்சித்தால் 10 நிமிடத்தில் அவரிடம் பேசுகிறீர்கள். ஆனால் சோறு தண்ணியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். அரசு தரப்பில் இருந்து யாராவது ஒருத்தர் வந்து பேசுறீங்களா?

யாருக்கு எது நடந்தா என்னன்னு இருக்காதீங்க அரசியல்வாதிகளே.

செத்தா ஒட்டுத்துணி கூட உடன் வராது. வௌ;ளைக்காரன் காலத்துல கூட சல்லிக்கட்டு நடந்தது. பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்குது. ஆனா ஒரு விளையாட்டுக்குத் தடை விதிச்சா என்ன பொருள்?

வெளிநாட்டுல இருந்து வந்த ஒரு அமைப்பு, நம்ம பாரம்பர்ய விளையாட்டு மேல வழக்குப் போட்டு, நமது கலாசாரத்தையே அழிக்க நினைக்குது. இந்தியாவில்தானே நாமும் இருக்கோம். சோறு தண்ணி இல்லாம மக்கள் போராடுறதைப் பார்க்கும் போது ரொம்பவே வேதனையா இருக்கு. அரசாங்கமே அடிக்க ஆள் வச்சுருக்குது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க ஆட்சியர் வச்சுருக்குது. யாருக்காகவும் நமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். நான் காவல்துறையினரைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். லஞ்சம் வாங்காத காவலர்தான் அடிக்கனும்னு சொன்னா உங்களால கம்பை ஓங்க முடியுமா? அப்படிப் பார்த்தா 100க்கு பத்து பேருதான் அடிக்க முடியும். தயவு செய்து மக்களை சித்ரவதை செய்யாதீர்கள். தனக்கு தேவையான ஒன்றைப் பெற போராட்டம் வெடிக்கத்தான் செய்யும். எங்கள் மாணவர்கள் நல்லவர்கள். அவர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இறுதி வரை போராடுவார்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும். என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.